சவுக்கு சங்கர் விவகாரம்: யுடியூப் சேனல் மீது வழக்கு
சவுக்கு சங்கர் விவகாரம்: யுடியூப் சேனல் மீது வழக்கு
ADDED : மே 06, 2024 06:34 AM

கோவை: பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர் சமீபத்தில் யு டியூப் சேனல் ஒன்றிக்கு நேர்காணல் அளித்திருந்தார். அதில், போலீஸ் அதிகாரிகள் குறித்தும், பெண் போலீசார் குறித்தும் அவதுாறான கருத்தை தெரிவித்திருந்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து தேனியில் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கைது செய்தனர்.
அவரை கோவை அழைத்து வந்து போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் வைத்து பல மணி நேரம் விசாரித்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். சுமார், 2:00 மணி நேரம் நடைபெற்ற வாதத்தின் முடிவில் நீதிபதி கோபாலகிருஷ்ணன், வருகிற, 17ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து, போலீசார் சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறையில், நள்ளிரவு 1:00 மணி அளவில் அடைத்தனர். இந்நிலையில், 'சவுக்கு ஆவேசம், போலீசா... பொறுக்கீங்களா... இப்படியும் செய்யுமா காவல்துறை' என்று பதிவிட்டு, சவுக்கு சங்கரின் பெண் போலீசார் குறித்து அவதுாறு வீடியோவை வெளியிட்ட யுடியூப் சேனல் 'ரெட்பிக்ஸ்' மீதும் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர்.