சவுக்கு சங்கர் வழக்கு: உச்ச நீதிமன்றம் கேள்வி; 'டிக்கி' அமைப்பையும் சேர்த்து விசாரிக்க உத்தரவு
சவுக்கு சங்கர் வழக்கு: உச்ச நீதிமன்றம் கேள்வி; 'டிக்கி' அமைப்பையும் சேர்த்து விசாரிக்க உத்தரவு
ADDED : மே 20, 2025 05:26 AM

துாய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக்கும் திட்டத்தில் முறைகேடு நடந்ததாகவும், சி.பி.ஐ., விசாரணை கோரியும் தொடர்ந்த வழக்கில், 'டிக்கி' அமைப்பையும் எதிர்மனுதாரராக சேர்க்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
முக்கிய பங்கு
துாய்மை பணியாளர்களை தொழில் முனைவோராக்கும் நோக்கில், நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள், கருவிகள் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இதுபோல், மத்திய அரசும் 'நமஸ்தே' திட்டத்தை அறிவித்தது. இவற்றில் முறைகேடு நடந்ததாகவும், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் யு டியூபர் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்தார்.
அதில், 'திட்டத்தை செயல்படுத்தும் பணியை, 'டிக்கி' எனப்படும் 'தலித் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சபை' அமைப்புக்கு சட்ட விரோதமாக வழங்கி, கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துஉள்ளது. 'தமிழக காங்., தலைவர் செல்வப் பெருந்தகைக்கு முக்கிய பங்கு உள்ளது' என கூறி இருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை, உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமி நாதன், வி.லட்சுமி நாராயணன் அமர்வு முன், நடந்தது. அடுத்த விசாரணை 21க்கு ஒத்தி வைக்கப்பட்டது.
விசாரணையின்போது, திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்துக்கு உத்தரவிட்டதோடு, 'டிக்கி' நிறுவன இயக்குநர்களில் ஒருவரும் செல்வப்பெருந்தகையும் உறவினர் என்ற குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், விளைவு களை எதிர்கொள்ள நேரிடும்' என நீதிபதிகள் எச்சரித்தனர்.
எதிர்மனுதாரர்
இந்நிலையில், இந்த வழக்கில் தங்கள் தரப்பை சேர்க்காமல் விசாரணை நடைபெறுவதாகவும், விசாரணைக்கு தடை விதிக்கக் கோரியும், உச்ச நீதிமன்றத்தில் 'டிக்கி' மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், நீதிபதி ஏ.ஜி.மாஷி அமர்வு நேற்று விசாரித்தது.
அப்போது, தங்களை இந்த வழக்கில் சேர்க்க, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டதாக, 'டிக்கி' தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து, ''சென்னை உயர் நீதிமன்றத்தில் கோடைக்கால விடுமுறை கால அமர்வு, இந்த விவகாரத்தை, அவசரமாக விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன?'' என தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கேள்வி எழுப்பினார்.
பின்னர், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், 'உயர் நீதிமன்றத்தில், மே 21ல் விசாரணை நடைபெறும் நிலையில், இந்த வழக்கில், 'டிக்கி'யை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிடுகிறோம். இதற்கான இடைக்கால மனுவை 'டிக்கி' தாக்கல் செய்யலாம். இந்த வழக்கின் மற்ற விவகாரங்களில் இப்போதைக்கு உச்ச நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. உயர் நீதிமன்றமே வழக்கை விசாரித்து, அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, உத்தரவை பிறப்பிக்கலாம்' என தெரிவித்தது.
- நமது சிறப்பு நிருபர் -