மாணவர்களை ஆராய்ச்சியாளராக்கும் திட்டம்; 1,014 பேருக்கு தலா 10,000 ரூபாய் நிதியுதவி
மாணவர்களை ஆராய்ச்சியாளராக்கும் திட்டம்; 1,014 பேருக்கு தலா 10,000 ரூபாய் நிதியுதவி
ADDED : ஏப் 21, 2025 05:31 AM
சென்னை : கல்லுாரி மாணவர்களை ஆராய்ச்சியாளராக்கும் திட்டத்தின் கீழ், 1,014 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு தலா 10,000 ரூபாயை, மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றம் வழங்க உள்ளது.
இதுகுறித்து, மன்றத்தின் உறுப்பினர்- செயலர் வின்சென்ட் வெளியிட்டு உள்ள அறிக்கை:தமிழக அரசின் உயர் கல்வித்துறையின் கீழ் செயல்படும், மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றம், முதுகலை கலை, அறிவியல் மற்றும் இளங்கலை தொழில்முறை படிப்புகள் படிக்கும் மாணவர்கள், ஆராய்ச்சியில் ஈடுபட புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஆராய்ச்சியில் ஈடுபட, 1,014 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு, தமிழ்நாடு மாநில அறிவியல் தொழில்நுட்ப மன்றம் சார்பில், தலா, 10,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.
அவர்களின் ஆய்வு திட்டம் முடிந்ததும், அறிவியல் தொழில்நுட்ப மன்றம் சார்பில், மறு ஆய்வுக்கூட்டம் நடக்கும். அதில், நிபுணர்கள் ஏற்கும் திட்டங்களுக்கு, தொழில்நுட்ப காப்புரிமை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
மேலும், மாணவரின் ஆராய்ச்சி கண்டுபிடிப்பு, ஒரு அறிவியல் ஆராய்ச்சி கட்டுரையாக பதிவு செய்யப்பட்டு, ஐ.எஸ்.பி.என்., எண்ணுடன் செயல்முறைகளாக வெளியிடப்படும். இது, அவரை விஞ்ஞானியாக்கும் முயற்சியாக இருக்கும். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.