ADDED : நவ 16, 2024 11:20 PM
சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறையின், 'கலப்பு விடுதி' திட்டத்தில், 13 மாவட்டங்களில் உள்ள, 10 பள்ளி, கல்லுாரி மாணவியர் விடுதிகள் ஒன்றாக இணைக்கப்பட்டு உள்ளன.
தமிழகம் முழுதும், 1,300க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் நல விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், 90,000க்கும் மேற்பட்ட மாணவர், மாணவியர் தங்கியுள்ளனர்.
எண்ணிக்கை குறைவு
கடந்த 10 ஆண்டு களில் விடுதிகளில் தங்கி பயிலும், மாணவியர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.
அதனால், கலப்பு விடுதி திட்டத்தின் கீழ், பள்ளி மற்றும் கல்லுாரி மாணவியர் இணைந்து, ஒரே விடுதியில் தங்கும் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது.
அந்த வகையில், நீலகிரி, திருநெல்வேலி, தஞ்சாவூர் மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட, 13 மாவட்டங்களில், 10 பள்ளி மாணவியர் விடுதிகளுடன், கல்லுாரி மாணவியர் விடுதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த, 10 ஆண்டுகளில், ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து உள்ளது.
தற்போது, குழந்தைகளின் கல்விக்கு ஏற்ப, பெற்றோர் தங்கள் வீடுகளை மாற்றி வரு கின்றனர். இதனால், விடுதிகளின் தேவை குறைந்து வருகிறது.
எனவே, அரசுக்கு ஏற்படும் செலவை குறைக்கும் வகையில், கலப்பு விடுதி திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இதன்படி, 13 மாவட்டங்களில், 10 விடுதிகளில், இத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம்.
150 பேர் தங்கலாம்
இதில், விடுதியின் தரைதளத்தில் பள்ளி மாணவியரும், முதல் மற்றும் இரண்டாம் தளங்களில் கல்லுாரி மாணவியரும் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
ஒரு விடுதியில், 150 மாணவியர் தங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மாணவியர் செயல்பாடுகளை கண்காணிக்க, இரண்டு காப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.