ADDED : ஜன 31, 2026 06:32 AM

சென்னை: பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, இரண்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட, பள்ளிக்கல்வி துறை அலுவலக ஊழியர்களை, போலீசார் கைது செய்தனர்.
தமிழக அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அனைத்து ஊழியர்கள் சங்கம் சார்பில், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் அலுவலக ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, நேற்று முன்தினம் முதல் சென்னையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இரண்டாம் நாளான நேற்றும், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக்கல்வி துறை அலுவலகம் அருகே, 300க்கும் மேற்பட்ட தொகுப்பூதிய அலுவலக ஊழியர்கள், குழந்தைகளுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை போலீசார் கைது செய்து, திருமங்கலத்தில் உள்ள சமூக நலக்கூடத்தில் அடைத்தனர்; மாலையில் விடுவித்தனர்.
இதுகுறித்து, சங்கத்தின் மாநில தலைவர் வாலன்டறின் பிரிட்டோ அளித்த பேட்டி:
பள்ளிக்கல்வி துறை அலுவலகங்களில், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, தொகுப்பூதியம் முறையில் பணியாற்றி வருகிறோம். எங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, இரண்டாம் நாளாக போராட்டம் நடத்தி வருகிறோம்.
பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் ஆர்த்தியை சந்தித்து, எங்களின் கோரிக்கையை தெரிவித்தோம்.
'அரசிடம் போதிய நிதி இல்லை' எனக்கூறிய அவர், எங்கள் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார். இதன்படி, போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

