ADDED : நவ 17, 2025 01:47 AM
செங்கம்: செங்கம் அருகே நாட்டு வெடி வெடித்து, பள்ளி மாணவர் படுகாயமடைந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த மேல்நாச்சிப்பட்டை சேர்ந்த மாணவர் ஜெயபிரகாஷ், 10; அரசு துவக்கப்பள்ளி ஐந்தாம் வகுப்பு மாணவர். இயற்கை உபாதை கழிக்க, வனப்பகுதிக்கு நேற்று காலை சென்றார்.
அப்போது, பாதையில் கிடந்த ஒரு பொருளை எடுத்து பார்த்தபோது, திடீரென அது வெடித்தது. இதில், மாணவரின் கை, முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லுாரியில் முதலுதவி சிகிச்சை அளித்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு, மாணவரை பெற்றோர் கொண்டு சென்றனர்.
செங்கம் போலீசார் விசாரணையில், காட்டுப் பன்றியை வேட்டையாட, அப்பகுதியில், 'அவுட் காய்' எனப்படும் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டிருந்ததும், இதையறியாமல் மாணவன், அதை எடுத்தபோது வெடித்ததும் தெரிந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

