ADDED : நவ 17, 2025 01:47 AM
ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஒன்றியம், கொத்தப்பட்டி, கன்னியப்பப்பிள்ளைபட்டி, கதிர்நரசிங்கபுரம், ராஜதானி, திம்மரசநாயக்கனுார், டி.ராஜகோபாலன்பட்டி, சுப்புலாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மல்லிகை, சுந்தர்ராஜபுரம், ஏத்தக்கோவில், கொப்பையம்பட்டி, மல்லையாபுரம், ஸ்ரீரங்கபுரம் உள்ளிட்ட பல கிராமங்களில் பன்னீர் ரோஜா பூக்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.
இப்பகுதிகளில் விளையும் பூக்கள், தினமும், ஆண்டிபட்டி பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு, வியாபாரிகள் மூலம் பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
கடந்த வாரத்தில் கிலோ, 300 ரூபாய் வரை விற்பனையான மல்லிகை நேற்று, 1,000 ரூபாய் வரையும், நான்கு நாட்களுக்கு முன் கிலோ, 30 ரூபாய் வரை விற்ற பன்னீர்ரோஜா பூக்கள் நேற்று, 200 ரூபாய் வரையும் விற்பனையாகின.
பூ வியாபாரிகள் கூறுகையில், 'தொடர் பனியால் மல்லிகை வரத்து குறைந்துள்ளது. சபரிமலை மண்டல காலத்தில் மல்லிகை, மூன்று முதல், ஐந்து டன் வரை வரத்து இருக்கும். வரத்து குறைந்தும், கார்த்திகை மாதம் துவங்கியுள்ளதாலும் தேவை அதிகரித்துள்ளது. இதனால் விலை உயர்ந்துள்ளது' என்றனர்.

