ADDED : ஜூலை 08, 2025 03:26 AM

திருப்புவனம் : கடந்த ஜூன் 28ல், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரத்தில், நகை திருட்டு வழக்கில் சிக்கிய கோவில் காவலாளி அஜித்குமாரை, தனிப்படை போலீசார் அடித்ததில் அவர் உயிரிழந்த சம்பவம், தமிழகம் முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இக்கொலையை கண்டித்து, திருப்புவனத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டது.
ஆனால், போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். 'தேவகோட்டை கண்டதேவி கோவில், மேலநெட்டூர் சாந்தநாயகி அம்மன் கோவில் ஆகியவற்றில் இன்று தேரோட்ட விழா மற்றும் திருப்புவனத்தில் வாரச்சந்தை நடக்க உள்ளதால், போலீசார் பாதுகாப்பு பணிக்கு செல்ல வேண்டி உள்ளது. மேலும், ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி கேட்ட இடத்தின் அருகே பள்ளிகள் நிறைய உள்ளன.
'அதனால், போலீஸ் அனுமதி மறுக்கப்படுகிறது' என போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, ''ஆர்ப்பாட்டம் நடத்துவது எங்கள் உரிமை. அதனால், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்துவோம். போலீசாரிடம் அனுமதி தான் கேட்டோம்; பாதுகாப்பு வழங்குங்கள் என யாரும் கேட்கவில்லை,'' என கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.