ரேஷன் கடைகளில் சோப்பு, சேமியா பட்டாசு விற்க நெருக்கடி தரும் செயலர்கள்
ரேஷன் கடைகளில் சோப்பு, சேமியா பட்டாசு விற்க நெருக்கடி தரும் செயலர்கள்
ADDED : செப் 18, 2024 09:20 PM
மதுரை:தமிழகத்தில் கூட்டுறவுத்துறையின் கீழ் உள்ள கிராமப்புற ரேஷன் கடைகளில் மாதந்தோறும் புதிய பெயர்களில் குளியல் சோப்பு, சேமியா விற்க கட்டாயப்படுத்துவதாக விற்பனையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
கூட்டுறவுத் துறையின் கீழ் தமிழகத்தில் 23 ஆயிரத்து 500 கடைகள் நுகர்வோருக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வினியோகம் செய்கின்றன. மாதந்தோறும் பச்சரிசி, பருப்பு, சீனி, பாமாயில், கோதுமை என ஏதாவது ஒரு பொருள் பற்றாக்குறையாக கடைகளுக்கு அனுப்புவது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் வாடிக்கையாகி விட்டது.
வீட்டுத் தேவைக்கான அத்தியாவசிய பொருட்களை எதிர்பார்த்து அடிக்கடி ரேஷன் கடைகளுக்கு அலையும் நுகர்வோரின் தலையில் கூடுதல் சுமையை ஏற்படுத்த நாங்கள் கட்டாயப்படுத்தப்படுகிறோம் என்கின்றனர் கிராமப்புற ரேஷன் கடை விற்பனையாளர்கள்.
அவர்கள் கூறியதாவது:
நகர்ப்புற ரேஷன் கடைகளில் கூட்டுறவுத் துறைக்குட்பட்ட பாண்டியன் கூட்டுறவு விற்பனை போன்ற பெரிய கடைகளில் இருந்து பாசிபருப்பு, பொரிகடலை, உளுந்தம்பருப்பு உள்ளிட்ட பொருட்கள் தனி விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.
தரத்துடன் விலையும் குறைவு என்பதால் நுகர்வோர் மறுப்பு சொல்லாமல் பணம் கொடுத்து இவற்றை வாங்கிச் செல்கின்றனர். அதேபோல அரசு உப்பு மற்றும் டீத்துாளுக்கும் வரவேற்பு உள்ளது.
கிராமப்புற ரேஷன் கடைகளில் கூட்டுறவு விற்பனை சங்க செயலர்கள் வைத்தது தான் சட்டம் என்ற நிலை உள்ளது. மாதந்தோறும் புதிய பெயர்களில் குளியல் சோப்புகளை பெட்டி பெட்டியாக இறக்கி விடுகின்றனர்.
தரமான பிராண்ட் சோப்பை விட விலையும் கூடுதலாக உள்ளது. சேமியாவும் வெவ்வேறு பெயர்களில் தரப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்களோடு குளியல் சோப்பு, சேமியா வாங்கச் சொன்னால் நுகர்வோர் தயங்குகின்றனர்.
கையில் இருக்கும் அலைபேசியில் உடனடியாக அந்த குளியல் சோப்பின் பெயரை கூகுளில் தேடி பார்த்து விட்டு ‛இந்த பிராண்ட் பெயரே இல்லை' என மறுத்து விடுகின்றனர். அதற்கு மேல் வாங்கச் சொல்லி கட்டாயப்படுத்த முடியவில்லை.
அவற்றை மொத்தமாக தேக்கிவைத்தால் காலாவதி தேதியான பின் எங்களிடமே அதற்குரிய தொகையை கட்டச் சொல்கின்றனர்.
தீபாவளிக்காக பட்டாசு விற்பனையை கட்டாயப்படுத்துகின்றனர். பெட்டி ரூ.1090 வீதம் கிராமப்புறத்திற்கு 10, நகர்ப்புறத்திற்கு 20 பெட்டிகள் விற்பனை இலக்காக அனுப்புகின்றனர். இது தரமான பிராண்ட் ஆக இருந்தாலும் விலை அதிகம் என்று நுகர்வோர் மறுக்கின்றனர்.
தீபாவளிக்காக அத்தியாவசியப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டிருக்கும் போது இது கூடுதல் சுமையைத் தருகிறது. மேலும் 90 சதவீத ரேஷன் கடைகள் மிகச்சிறிய இடத்தில் தான் உள்ளது. உள்ளே அரிசி, பருப்பு உணவுப்பொருட்களுடன் பட்டாசுகளையும் வைப்பதற்கு தயக்கமாகவும் பயமாகவும் உள்ளது.
மக்களுக்கு என்ன தேவை என்பதை அந்தந்த ரேஷன் கடை விற்பனையாளர்களிடம் கேட்டு அதற்கேற்ற பொருட்களை அனுப்பினால் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணலாம். ஐந்தாண்டுக்கு முன் வரை அந்தந்த முக்கிய சங்கங்களின் பெயரில் தனி கடைகள் அமைத்து பட்டாசு விற்றதைப் போல மீண்டும் செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.