ADDED : அக் 11, 2025 07:36 PM
கோவை:தமிழக அரசு பள்ளிகளில் உள்ள நுாலகர் பணியிடங்களை சரண் செய்ய வேண்டும் என்ற உத்தரவு திரும்பப் பெறப்பட்டு, தொகுப்பூதிய அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது.
தமிழக அரசு பள்ளிகளில் நுாலகர்களாக பணியாற்றியவர்கள் ஓய்வு பெற்றால், அப்பணியிடங்களை சரண் செய்ய வேண்டுமென பள்ளி கல்வித்துறை அரசாணை வெளியிட்டது. அதன்படி, நுாலகர் பணியிடங்கள், 'ஒழிவடையும் பணியிடங்கள்' என அறிவிக்கப்பட்டன.
இதனால், எதிர்காலத்தில் அரசு பள்ளிகளில் நுாலகர் பணியிடமே இல்லாமல் போகும் நிலை உருவாகக் கூடிய அபாயம் இருப்பதாக, செப்., 30ல் நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.
கடந்த, 2010 மற்றும் 2013ல் துவக்கப்பட்ட அரசு மாதிரி பள்ளிகளில் தொகுப்பூதிய அடிப்படையில் நுாலகர்கள் நியமிக்கப்பட்டனர்.
அவர்களில் தற்போது, 35 பேர் பணியாற்றும் நிலையில், ஒன்பது பணியிடங்கள் ஐந்து ஆண்டுகளாக காலியாக உள்ளன.
இப்பணியில் உள்ளவர்கள் வேறு பள்ளிகளுக்கு மாறுதல் பெற முடியாத நிலையும் உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டது. நம் நாளிதழில் வெளியிட்ட செய்தி எதிரொலியாக, பள்ளிக்கல்வி துறை தன் முந்தைய உத்தரவை மாற்றம் செய்துள்ளது.
அதன்படி, 'ஒழிவடையும் பணியிடங்களாக' மாற்றப்பட்ட நுாலகர் பணியிடங்கள் மீதான உத்தரவு ரத்து செய்யப்பட்டு, அவை மீண்டும் தொகுப்பூதிய பணியிடங்களாக மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளன.