'கிங்டம்' படத்தை திரையிட்ட தியேட்டர்களுக்கு பாதுகாப்பு
'கிங்டம்' படத்தை திரையிட்ட தியேட்டர்களுக்கு பாதுகாப்பு
ADDED : ஆக 08, 2025 12:54 AM
சென்னை:ஜனநாயக முறையில் போராட்டம் நடத்த அனைவருக்கும் உரிமை உள்ளதாக தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், கிங்டம் திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது.
விஜய் தேவரகொண்டா நடித்துள்ள, கிங்டம் திரைப்படம், தமிழகத்தில் வெளியாகியுள்ளது.
'இந்த படத்தில், தமிழ் ஈழ பிரச்னை குறித்து அவதுாறு காட்சிகள் உள்ளதால், திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.
இதையடுத்து, திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி, படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை பெற்றுள்ள நிறுவனம் தரப்பில், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவு:
ஜனநாயக நாட்டில், படைப்பாளிகள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க உரிமை உள்ளது. சென்ஸார் போர்டு சான்றிதழ் வழங்கிய திரைப்படத்தை, மூன்றாவது நபர் எவரும் தடுக்க முடியாது.
எந்தவொரு தனிநபரால் அல்லது அமைப்பால் ஏதேனும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
திரைப்படத்தை விரும்பவில்லை எனில், அந்த படத்தை பார்க்க வேண்டாம். நாம் தமிழர் கட்சி அமைதியான முறையில் போராட்டம் நடத்த உரிமை உள்ளது. முறையாக அனுமதி பெற்று, ஒதுக்கப்பட்ட இடத்தில் போராட்டங்களை நடத்தலாம். போராட்டம் நடத்தும் உரிமையை தடுக்க முடியாது.
ஆனால், கிங்டம் படம் திரையிடப்பட்டுள்ள திரையரங்குகளுக்கு, காவல் துறையால் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

