அனைத்து பல்கலை, கல்லுாரி வளாகங்களில் ஜனவரிக்குள் பாதுகாப்பு பலப்படும்: அமைச்சர்
அனைத்து பல்கலை, கல்லுாரி வளாகங்களில் ஜனவரிக்குள் பாதுகாப்பு பலப்படும்: அமைச்சர்
ADDED : டிச 28, 2024 12:21 AM

சென்னை: “அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை முன்னுதாரணமாக வைத்து, அனைத்து பல்கலை, கல்லுாரி வளாகங்களிலும், ஜனவரிக்குள் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்,” என, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் கூறினார்.
பல்கலை வளாகத்தில் அவர், நேற்று அளித்த பேட்டி:
இதுபோன்ற சம்பவங்களில் புகார் அளிக்க, ஒரு குழுவை அமைத்துள்ளோம். அந்த குழுவுக்கு புகார் ஏதும் வரவில்லை என்பது சங்கடமான செய்தி.
மனநல ஆலோசனை
காவல் துறைக்கு புகார் மனு சென்றதும், பல்கலைக்கு செய்தி வருகிறது. அதன்பின், பதிவாளர் உள்ளிட்ட நிர்வாகமும், உயர்கல்வித்துறை அமைச்சரான நானும், காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக கூறினோம்.
இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையம் இந்த வழக்கில் விசாரணை நடத்துவதாகக் கூறியது. அதற்கும் முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம். இதை சிலர் அரசியலாக்குகின்றனர்; ஊடகங்களில் அது பரவலாக்கப்படுகிறது.
இது, பல்கலை மாணவியின் நலன் குறித்த விவகாரம். இதை, சட்டம் தன் கையில் எடுத்துள்ளது. அதை எந்த நிலையிலும் நாங்கள் அரசியலாக்கி ஆதாயம் தேட வேண்டிய அவசியம் இல்லை. ஒன்றும் கிடைக்காதவர்கள் தேடுகிற தீனிக்கு, இந்த மாணவியின் சம்பவத்தை இரையாக்க விரும்பவில்லை.
பத்திரிகை செய்திகளையும் நாங்கள் படிப்பினையாக எடுத்து, இங்கு சம்பவம் நடந்த இடத்தையும் ஆய்வு செய்தோம்.
நுழைவாயில்கள் பற்றி யும், நிறுவப்பட்டுள்ள, 'சிசிடிவி கேமரா'க்கள் பற்றியும், இங்குள்ள மின் விளக்குகள் பற்றியும், பல்கலை நிர்வாகத்திடம் விசாரித்துள்ளோம்.
மாணவியருக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டால், அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க அமைக்கப்பட்டது தான், 'போஷ் கமிட்டி'. ஆனால், அந்த கமிட்டியிடம் மாணவி புகார் அளிக்கவில்லை என்பதுதான் துயரச்செய்தி.
யார் வாயிலாகவாவது வந்திருந்தால்கூட, அவர்களை அழைத்துப் பேசி தீர்வு கண்டிருக்கலாம். அவர் புகார் அளித்த பின்னரே, காவல்துறை வாயிலாக பல்கலைக்கே தகவல் தெரிந்தது.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு உரிய சட்ட பாதுகாப்பும், மனநல ஆலோசனையும் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இனி வரும் காலங்களில், கல்லுாரி நிர்வாகத்தை கண்காணித்து, இந்த குழுவிற்கு வந்த புகார்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்; அதை நாங்கள் பின்பற்றுவோம்.
இந்த சம்பவத்தை விசாரிக்க பதிவாளர், பேராசிரியர்கள், மாணவ பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குழுவில், இதுபோல பாதிக்கப்பட்ட வேறு யாராவது இருந்தாலும், அவர்கள் ரகசியமாக புகார் அளிக்கலாம். தொடர்புகொள்ள மொபைல் போன் எண் அறிவிக்கப்படும்.
சம்பவம் நடந்த நேரம், இரவு 8:00 மணி. இதில், சம்பந்தப்பட்ட குற்றவாளியாக சொல்லப்பட்டுள்ள நபர், அடிக்கடி வந்து செல்வதாக விடுதிக் காப்பாளர்கள் சொல்கின்றனர். பகுதி நேர பணியாளராக இருக்கலாம் என்பதால், அவர்கள் தடை செய்யவில்லை என்கின்றனர்.
பணி நேரத்தில், வளாகத்துக்குள் யார் வந்தாலும், அடையாள அட்டையை காட்டி விட்டு தான் உள்ளே செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளோம்.
வாகனங்களையும், 'சிசிடிவி கேமரா'க்களில் பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளோம்.
பல்கலையில் விடுதிகள், உணவுக்கூடங்கள், சாலைகளில் கேமராக்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டுள்ளன.
அவற்றில், 80 சதவீதம் இயங்குகின்றன. ஆனால், சம்பவம் நடந்த இடம், முட்புதர் போன்ற பகுதி. அங்கு கேமராக்கள் பொருத்தப்படவில்லை. தற்போது, புதர்களை அகற்றவும், எந்த இடமும் இருட்டாக இருக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளோம்.
விசாரணை
மேலும், கல்லுாரி விடுதி மாணவர்களுக்கான கட்டுப்பாடுகளையும் வரையறுத்து, விரைவில் தெரிவிக்க உள்ளோம். இதை முன்னுதாரணமாக வைத்து, அனைத்து பல்கலை, கல்லுாரி விடுதிகளின் பாதுகாப்பை வரும் ஜனவரிக்குள் உறுதி செய்ய உள்ளோம்.
குற்றவாளியாகக் கருதப்படுபவர், வெளியில் பிரியாணி கடை வைத்துள்ளதால் மாணவர்களிடம் பழகி உள்ளார் என்பதும், அவரின் மனைவி பல்கலையில் பகுதி நேரமாக பணியாற்றுகிறார் என்பதும், விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதுபோல, மீண்டும் எந்த சம்பவமும் நடக்காது என்பதற்கு முழு உத்தரவாதத்தை அளிக்கிறோம்.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கும் இடையில் நடக்கும் விசாரணையின் அடிப்படையில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு.
அந்த நிலையில், ஒரு காரை அடையாளப்படுத்துவதையோ அல்லது அது தொடர்பான நபரை காப்பாற்றுவதாகக் கூறப்படுவதையோ, நாங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
வழக்கு, விசாரணையில் இருப்பதால் இதுகுறித்து விரிவாகப் பேச முடியாது. குற்றவாளி தி.மு.க.,வைச் சேர்ந்தவர் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

