வெள்ளிமலை மின் திட்டத்திற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்பு
வெள்ளிமலை மின் திட்டத்திற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்பு
ADDED : நவ 14, 2024 10:23 PM
சென்னை:கன்னியாகுமரி வெள்ளிமலை உட்பட, 11 இடங்களில் நீரேற்று மின் நிலைய கட்டுமான பணிகளை விரைவாக துவக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக, மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி பெறும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.
நீலகிரி, கன்னியாகுமரி, தேனி, கோவை, திண்டுக்கல், சேலம், திருநெல்வேலி மாவட்டங்களில், 11 இடங்களில், 10,400 மெகாவாட் திறனில் நீரேற்று மின் நிலையங்களை அமைக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இவற்றை, பொது - தனியார் கூட்டு முயற்சியில் செயல்படுத்த, தமிழக அரசு, 2023 டிசம்பரில் அனுமதி வழங்கியது.
முதல் கட்டமாக, 4,521 கோடி ரூபாய் செலவில், கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலை நீரேற்று மின் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, மின் வாரியம் தற்போது, 'டெண்டர்' கோரியுள்ளது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த ஓராண்டாக, சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு, பொது - தனியார் கூட்டு முறையில் திட்டங்களை செயல்படுத்த தேவையான ஆவணங்கள் தயாரிப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து வந்தன. இதை தொடர்ந்து, கூட்டு நிறுவனங்களை தேர்வு செய்து, அவற்றின் வாயிலாக, மின் நிலையங்களின் கட்டுமான பணிகள் விரைவாக துவக்கப்பட உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.