விருதுநகரில் ஜவுளி பூங்கா சிறப்பு முகமை நிறுவனத்திற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்பு
விருதுநகரில் ஜவுளி பூங்கா சிறப்பு முகமை நிறுவனத்திற்கு மத்திய அரசிடம் அனுமதி கேட்பு
ADDED : பிப் 15, 2024 11:33 PM

சென்னை:தமிழக அரசு, மத்திய அரசுடன் இணைந்து விருதுநகரில் அமைக்க உள்ள பிரமாண்ட ஜவுளி பூங்கா, 'பி.எம்., மெகா இண்டகிரேட்டட் டெக்ஸ்டைல் ரீஜன்ஸ் அண்டு அப்பரல் பார்க் தமிழகம்' என்ற சிறப்பு முகமை நிறுவனம் வாயிலாக செயல்படுத்தப்பட உள்ளது. இந்த கூட்டு நிறுவனத்திற்கு, மத்திய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு, ஜவுளி தொழிலுக்கான உள்கட்டமைப்பை மேம்படுத்த, தமிழகம் உட்பட ஏழு மாநிலங்களில், பிரதமர் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க ஒப்புதல் அளித்தது.
தமிழகத்தில் அந்த பூங்காவை, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம், விருதுநகர் மாவட்டம், இ.குமாரலிங்கபுரத்தில் 1,072 ஏக்கரில் அமைக்க உள்ளது. திட்டச் செலவு 2,000 கோடி ரூபாய். இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இடையில், 2023 மார்ச்சில் கையெழுத்தானது.
இத்திட்டத்திற்காக தமிழகத்திற்கு, மத்திய அரசு 500 கோடி ரூபாய் மானியம் வழங்க உள்ளது.விருதுநகரில் ஜவுளி பூங்கா அமைக்கும் பணிகளை மத்திய அரசும், தமிழக அரசின், 'சிப்காட்' நிறுவனமும் இணைந்து சிறப்பு முகமை வாயிலாக செயல்படுத்த உள்ளன.
இதற்காக, 'பி.எம்., மெகா இண்டகிரேட்டட் டெக்ஸ்டைல் ரீஜன்ஸ் அண்டு அப்பரல் பார்க் தமிழகம் பிரைவேட் லிமிடெட்' என்ற சிறப்பு முகமை நிறுவனம் ஏற்படுத்தப்பட உள்ளது. இதற்கு தமிழக அரசு, மத்திய கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஜவுளி பூங்காவை மேம்படுத்தும் பணிக்கான ஒப்பந்த நிறுவன தேர்வு பணிகளை துவக்க, மத்திய அரசிடம் இருந்து இம்மாத இறுதிக்குள் அனுமதி கிடைக்கும் என தெரிகிறது; சிறப்பு முகமைக்கு, மத்திய கூட்டுறவு சங்க பதிவாளரிடம் இருந்து அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
எனவே, பூங்காவை அமைக்கும் பணிகள் ஜூனுக்குள் துவக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.