ADDED : அக் 09, 2025 02:52 AM
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நடிகை விஜயலட்சுமி இடையிலான வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து வைத்தது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக நடிகை விஜயலட்சுமி, சென்னை வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதை ரத்து செய்யக்கோரி சீமான் தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரித்து முடிக்கும்படி போலீசுக்கு உத்தரவிட்டது.
இதற்கு எதிராக சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. சமீபத்தில் மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இரு தரப்பும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்டு, இந்த விவகாரத்தை சமரசமாக முடித்துக் கொள்ள அறிவுறுத்தியது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆர்.மகாதேவன் அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சீமான் தரப்பு வழக்கறிஞர் முன்வைத்த வாதம்:
விஜயலட்சுமி தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரம் ஏற்கும்படி இல்லை. நீதிமன்ற உத்தரவு அடிப்படையில் வழக்கை திரும்ப பெறுவதாக தெரிவித்து இருக்கிறார். சீமான் தரப்பை பொறுத்தவரைக்கும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாக தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதற்கு பதில் அளித்த நடிகை விஜயலட்சுமி தரப்பு வழக்கறிஞர், 'நாங்கள் புகாரை திரும்ப பெறு வதாக தெரிவித்துள்ளோம். இதற்கு மேல் சீமான் குறித்து விஜயலட்சுமி எதுவும் பேச மாட்டார் என உறுதி அளிக்கிறோம். சீமானின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்று, வழக்கை திரும்ப பெறுகிறோம்' என்றார்.
இதையடுத்து, நீதிபதி கள் பிறப்பித்த உத்தரவு:
இந்த விவகாரத்தில் சீமான் மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டதை அடிப்படையாக வைத்து வழக்கை முடித்து வைக்கிறோம். முன்னதாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது.
நடிகை விஜயலட்சுமி மற்றும் சீமான் ஆகியோர் ஊடகங்களில் இது தொடர்பாக பேட்டியோ அல்லது தகவலையோ வெளியிடக் கூடாது.
இவ்வாறு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது
- டில்லி சிறப்பு நிருபர் -.