மரங்களுக்கு முத்தம் கொடுத்து மாநாட்டை அறிவித்தார் சீமான்
மரங்களுக்கு முத்தம் கொடுத்து மாநாட்டை அறிவித்தார் சீமான்
UPDATED : ஆக 20, 2025 05:42 PM
ADDED : ஆக 20, 2025 05:12 PM

சென்னை: திருத்தணியில் மரங்களின் மாநாட்டுக்கான இடத்தை பார்வையிட சென்ற போது மரங்களை கட்டிப்பிடித்து சீமான் முத்தம் கொடுத்தார்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அண்மைக் காலமாக நூதன முறையில் ஆர்ப்பாட்டங்களை கையில் எடுத்து நடத்தி வருகிறார். பனையேறும் தொழிலாளர்களுக்காக, கள் மீதான தடையை நீக்க கோரி பனை மரத்தில் ஏறி, கள் இறக்கும் போராட்டத்தை நடத்தினார்.
பின்னர் மேய்ச்சல் நிலத்தை ஆக்கிரமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாடு மேய்க்கும் போராட்டம் நடத்தினார். அந்த வகையில் அவர் வரும், ஆகஸ்ட் 30ம் தேதி 'மரங்களோடு பேசுவோம்; மரங்களுக்காகப் பேசுவோம்!' என்ற தலைப்பில் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே அருங்குளம் கிராமத்தில், போராட்டம் நடத்த இருக்கிறார்.
மரங்களின் மாநாடு என்ற பெயரில் நடக்க உள்ள அந்த நிகழ்ச்சிக்கான இடத்தைஇன்று நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது மரங்களுடன் சீமான் போட்டோ எடுத்துக் கொண்டார். மரங்களுக்கு முத்தம் கொடுத்தார். அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் சீமான் பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
உலக உயிர்களின் மூச்சு
பின்னர் நிருபர்கள் சந்திப்பில் சீமான் கூறியதாவது: மனிதர்கள் இல்லாமல் மரங்கள் வாழ்ந்து விடும். ஆனால் மரங்கள் இல்லாமல் மனிதர்கள் வாழ முடியாது. எந்த உயிரினமும் வாழ முடியாது. உலக உயிர்களின் மூச்சி மரங்கள். இதனை நாம் ஆக்சிஜன் என்று சொல்கிறோம்.
விளம்பரத்தில் வளர்க்கும்
பிள்ளைகளுக்கு இயற்கையை நேசிக்க கற்றுக் கொடுக்க வேண்டும். மரங்களைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு இவ்வளவு இருக்கிறதா என்பதற்காக மாநாட்டை நடத்துகிறோம். இந்த அரசு பதாகைகளில் தான் மரம் வளர்க்கும். விளம்பரத்தில் வளர்க்கும்.மண்ணில் வளர்க்காது.
1.5 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள் என்கிறார்கள்.ஒவ்வொரு தலைவர் பிறந்தநாளுக்கும் வருடத்திற்கு 1.5 கோடி மரம் வைத்திருந்தால் இப்பொழுது எவ்வளவு இருக்கும். ஆனால் வைக்கவில்லை. நடிகர் இருக்கிறார். தனது பிறந்தநாள் அன்று ஒவ்வொரு ரசிகரும் மரம் நடுங்கள் என்றால் எவ்வளவு மரங்கள் வளர்ந்திருக்கும்.
பருவநிலை மாறிவிட்டது என்று சொல்கிறார்கள். பருவநிலை மாறிவிட்டதா அல்லது நீ மாற்றினாயா இதுதான் கேள்வி. வணங்குவதற்கு லட்சம் சாமி இருக்கிறது. ஆனால் வாழ்வதற்கு ஒரு பூமி தான் இருக்கிறது. வெயில் அடித்தால் நீங்கள் குடை பிடிக்கிறீர்கள். புவி வெப்பமடைதல் என்ன செய்ய வேண்டும். அதற்கு குடை பிடிக்க வேண்டும்.
குடை பிடிக்கணும்!
என்ன குடை பிடிக்க வேண்டும் பச்சைக் குடை பிடிக்க வேண்டும் அதுதான் மர குடை. வளர்ப்பதில் என்ன கஷ்டம். பத்தாண்டு பசுமை திட்டம். பல கோடி பனைத்திட்டம் என்று அறிவித்து விடுகிறேன். ஐந்து ஆண்டுகள் ஆட்சியை கொடுங்கள் நான் பூமியை பச்சை போர்வையால் போர்த்தி விடுகிறேன். இவ்வாறு சீமான் கூறினார்.