தியாகிக்கு மணிமண்டபம் கட்ட இடம் வாங்கிய சீமான்: தி.மு.க., குழப்பம்
தியாகிக்கு மணிமண்டபம் கட்ட இடம் வாங்கிய சீமான்: தி.மு.க., குழப்பம்
UPDATED : ஏப் 22, 2025 02:00 AM
ADDED : ஏப் 22, 2025 01:57 AM

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சமாதியை சுற்றியுள்ள 4 சென்ட் இடத்தை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விலைக்கு வாங்கியுள்ளார்.
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலையில், 1965ல் நடந்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில், பல்கலையில் படித்துக் கொண்டிருந்த மாணவர் ராஜேந்திரன் உயிரிழந்தார்.
![]() |
ராஜேந்திரனின் சொந்த ஊரான சிவகங்கையில் பதற்றமான சூழல் நிலவியதால், அவருடைய உடலை அங்கு கொண்டு செல்ல முடியவில்லை.
சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை, ரங்கப்பிள்ளை மண்டபம் பகுதியில் ராஜேந்திரன் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அங்கேயே சமாதியும் கட்டப்பட்டது.
ராஜேந்திரனின் நினைவு நாளை, ஒவ்வொரு ஆண்டும் வீரவணக்க நாளாக அனுசரித்து, தி.மு.க., நிர்வாகிகள், அங்கிருக்கும் சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
![]() |
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் நிர்வாகிகளுடன், தியாகி ராஜேந்திரன் சமாதிக்கு நேற்று காலை வந்தார்.
பின், சமாதியில் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். பின், சமாதியை சுற்றியுள்ள 4 சென்ட் இடத்தை விலைக்கு வாங்கி, பரங்கிப்பேட்டை சார் - பதிவாளர் அலுவலகத்தில், தன் பெயரில் பத்திரப்பதிவு செய்தார்.
குறிப்பிட்ட 4 சென்ட் நிலத்தில், ராஜேந்திரனுக்கு நினைவிடம் கட்ட, சீமான் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடலுாரில் பிப்., மாதம் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் ஸ்டாலின், தியாகி ராஜேந்திரன் சமாதி புதுப்பிக்கப்படும் என அறிவித்திருக்கும் நிலையில், ராஜேந்திரனுக்கு மணிமண்டபம் கட்ட சீமான் முயற்சிப்பது தி.மு.க.,வினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.