வெளிமாநிலத்தவருக்கு ஓட்டுரிமையா நான் இருக்கும் வரை நடக்காது; சவால் விடுகிறார் சீமான்
வெளிமாநிலத்தவருக்கு ஓட்டுரிமையா நான் இருக்கும் வரை நடக்காது; சவால் விடுகிறார் சீமான்
ADDED : ஆக 06, 2025 08:11 AM
மதுரை : ''வெளி மாநிலத்தவர்களுக்கு தமிழகத்தில் ஓட்டுரிமை வழங்கக்கூடாது; நான் இருக்கும் வரை அது நடக்காது'' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
மதுரையில் அவர் கூறியதாவது: தமிழகத்தை மீட்போம், ஓரணியில் திரள்வோம் என்கிறார்கள். தமிழகத்தை யாரிடத்தில் அடமானத்தில் வைத்துள்ளார்கள். இவ்வளவு நாட்கள் மீட்காமல் என்ன செய்து கொண்டிருந்தார்கள்.
எதற்கு ஓரணியில் திரள வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்வதற்கா. ஜி.எஸ்.டி.,யை எதிர்த்து போராடவா. கச்சதீவை மீட்பதற்கா.
தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் தமிழகத்தை நாசம் செய்ததே கருணாநிதிதான். புதுக்கோட்டை மாவட்டத்திற்கு எம்.பி., உள்ளாரா. எல்லாவற்றையும் நாசம் செய்ததே தி.மு.க.,தான். தேர்தல் வரும்போது பாசம், வேஷம் போட்டு நடிப்பார்கள்.
மெதுவாக ஹிந்தியை திணித்து ஹிந்தி பேசும் மாநிலமாக அபகரித்து வருகிறார்கள். வட இந்தியர்களுக்கு வாக்குரிமை கொடுத்துவிட்டால் அரசியலையும், அதிகாரத்தையும் அவன் தீர்மானித்து விடுவான்.
அது முழுக்க பா.ஜ., ஓட்டுகள்தான். வெளி மாநிலத்தவர்களுக்கு தமிழகத்தில் ஓட்டுரிமை வழங்கக்கூடாது. நான் இருக்கும் வரை அது நடக்காது. தி.மு.க., வரக்கூடாது என அ.தி.மு.க.,வுக்கும், அ.தி.மு.க., வரக்கூடாது என தி.மு.க.,வுக்கும் மக்கள் ஓட்டளித்து வருகின்றனர். தீமையை வைத்து மற்றொரு தீமையை எப்படி ஒழிக்க முடியும்.
ஒருவர் வேலைக்கு வரும் போது அவரது நேர்காணலை வைத்து என்ன பதில்கள், கருத்து சொல்கிறார்கள் என்ற அடிப்படையில் தான் தேர்வு செய்வார்கள்.
அந்த வகையில் சினிமா புகழ் உள்ள விஜய்க்கு எங்களைக் காட்டிலும் வெளிச்சம் உள்ளதாக சொல்கிறார்கள். அதில் தவறில்லை. ஆனால் அவர் எந்த தத்துவத்தை வைத்து, என்ன போராட்டத்தை முன்னிறுத்தி நடக்கிறார் என்பதை வைத்து தான் அரசியல் எதிர்காலம் உள்ளது.
விஜயகாந்துக்கு இல்லாத எழுச்சியா.
அவர் எப்போது கூட்டணிக்கு சென்றாரோ அப்போதே அவருக்கு ஓட்டு சதவீதம் குறைந்துவிட்டது. அண்ணாதுரை வழியில் விஜய் செல்கிறார் என்றால் ஸ்டாலின், பழனிசாமி எந்த வழியில் செல்கிறார்கள். நான் என் அண்ணன்(விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன்) வழியில் செல்கிறேன் என்றார்.