வருணிடம் சீமான் மன்னிப்பு கேட்கவில்லை: துரைமுருகன்
வருணிடம் சீமான் மன்னிப்பு கேட்கவில்லை: துரைமுருகன்
ADDED : ஜன 01, 2025 06:21 AM

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மன்னிப்பு கேட்க, தொழிலதிபர் ஒருவர் வாயிலாக துாது விட்டதாக, திருச்சி எஸ்.பி., வருண்குமார் தெரிவித்துள்ளதை, நாம் தமிழர் கட்சி மறுத்துள்ளது.
அக்கட்சி கொள்கை பரப்பு செயலர் 'சாட்டை' துரைமுருகன் அறிக்கை:
திருச்சி எஸ்.பி., வருண்குமார், சீமான் குறித்து பொய்யான தகவல்களை பொதுவெளியில் பரப்பி வருகிறார்.
தொழிலதிபர் வாயிலாக தனக்கு செய்தி அனுப்பியதாக சொல்லும் வருண்குமார், யார் அந்த தொழிலதிபர் என்பதை சொல்வாரா? செய்தி உண்மையானால், அதை ஏன் அவர் மறைக்க வேண்டும்?
வருண்குமாரால் போடப்பட்ட பொய் வழக்குகளும், வழக்கின்போது பறிக்கப்பட்ட மொபைல் போன்களை வைத்து, அவர் செய்யும் மூன்றாம் தர வேலைகளையும் பொது சமூகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. நீங்கள் போன அதே நீதிமன்றத்தில், எங்களுக்கு எதிராக செய்த மூன்றாம் தர வேலைகளை ஆதாரத்துடன் ஆவணப்படுத்துகிறோம்.
சட்டமும், நீதியும் யார் பக்கம் இருக்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள். மற்றபடி, மன்னிப்பு என்பது எங்கள் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வரலாற்றிலேயே கிடையாது.
யார் துாது விட்டது, யார் கெஞ்சியது, யார் பத்திரிகையாளர்களை அனுப்பி பேசியது என்பதை விலாவாரியாக பேசுவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

