சீமான் கட்சி நிர்வாகிகள் தி.மு.க.,வில் நாளை ஐக்கியம்
சீமான் கட்சி நிர்வாகிகள் தி.மு.க.,வில் நாளை ஐக்கியம்
ADDED : ஜன 22, 2025 06:35 PM
நாம் தமிழர் கட்சியில் இருந்து வெளியேறிய நிர்வாகிகள் உள்பட, 3,000 பேர், சென்னையில், நாளை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.,வில் இணைகின்றனர்.
கடந்த 2024ல் நடந்த லோக்சபா தேர்தலில், நாம் தமிழர் கட்சிக்கு, 8.22 சதவீதம் ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. இதன் காரணமாக, தேர்தல் ஆணையத்தால் அக்கட்சி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, நாகப்பட்டினம், ஈரோடு, திருச்சி, புதுச்சேரி உள்ளிட்ட லோக்சபா தொகுதிகளில், 3ம் இடத்தை பிடித்தது.
அக்கட்சியின் ஓட்டு வங்கி அதிகரித்து வருவதாலும், அதன் தலைவர் சீமான் தொடர்ந்து தி.மு.க., அரசை விமர்சித்து வருவதாலும், அக்கட்சி மீது ஆளும் தரப்பு கடும் அதிருப்தி அடைந்தது. அதனால், சீமான் கட்சி நிர்வாகிகளை இழுத்து, அக்கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்க முடிவு செய்யப்பட்டது.
அதற்கான பொறுப்பை, கட்சியின் மாணவரணி தலைவர் ராஜிவ்காந்தியிடம், துணை முதல்வர் உதயநிதி, ஓராண்டுக்கு முன் ஒப்படைத்திருந்தார். நாளையுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. அதை முன்னிட்டு, 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட, 80 வேட்பாளர்கள், லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட 10க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், 37 பேர் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் மற்றும் பிற கட்சி நிர்வாகிகள் என, 3,000 பேர் தி.மு.க.,வில் நாளை இணைகின்றனர். முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி முன்னிலையில், இந்நிகழ்ச்சி நடக்கவுள்ளது.
லோக்சபா தேர்தலுக்குப் பின், பல மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏற்கனவே தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட பல கட்சிகளிலும் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீமான் வீட்டை முற்றுகையிட்ட ஈ.வெ.ரா., இயக்கத்தினர் கைது
சென்னை:ஈ.வெ.ரா.,வை
இழிவுப்படுத்தியதாக, சீமானின் வீட்டை பல்வேறு அமைப்பினர் நேற்று
முற்றுகையிட்ட நிலையில், அவருக்கு ஆதரவாக வந்தவர்களுக்கு பிரியாணி
கொடுத்து, நா.த.க.,வினர் உபசரித்தனர்.
சென்னை நீலங்கரையில் உள்ள,
நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டை, ஈ.வெ.ரா., கொள்கை சார்ந்த
பல்வேறு அமைப்பினர் முற்றுகையிட போவதாக அறிவித்தனர். இதனால், நேற்று
முன்தினம் இரவு முதல், 300க்கும் மேற்பட்ட நா.த.க.,வினர் உருட்டு
கட்டைகளுடன், சீமான் வீட்டுக்கு பாதுகாப்பு அளித்தனர். அதேபோல், 200க்கும்
மேற்பட்ட போலீசாரும், பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.
இந்நிலையில்
நேற்று காலை, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தந்தை
பெரியார் திராவிடர் கழக செயலர் ராமகிருஷ்ணன் தலைமையில், 1,200க்கும்
மேற்பட்டோர், நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிட, கிழக்கு
கடற்கரை சாலையில் பேரணியாக சென்றனர். அவர்களை, சீமான் வீட்டிற்கு, 500
மீட்டருக்கு முன், போலீசார் தடுத்து நிறுத்தினர்.
அப்போது,
அங்கிருந்த சீமானின் பேனரை கிழித்து, உள்ளாடை மட்டும் அணிந்த சீமானின்
உருவப் படத்தை செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்தனர். அவரது
உருவப்பொம்மையை எரித்து, சீமானுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். பின்,
அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
சீமான் வீட்டில்
குவிந்த நா.த.க.,வினருக்கு, காலை உணவாக இட்லி, பொங்கல், வடை, சட்னி,
சாம்பார் வழங்கப்பட்டது. மதியம், சிக்கன் பிரியாணி சமைத்து
கொடுக்கப்பட்டதுடன், பாட்டு கச்சேரியும் நடத்தப்பட்டது. அப்போது,
நா.த.க.,வினர் நடனமாடினர்.
- நமது நிருபர் -

