மோடி அரசை காப்பாற்ற தயாராக இருக்கிறது தி.மு.க.,; அடித்து சொல்கிறார் சீமான்
மோடி அரசை காப்பாற்ற தயாராக இருக்கிறது தி.மு.க.,; அடித்து சொல்கிறார் சீமான்
ADDED : மே 24, 2025 11:03 PM

சென்னை : ''சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் ஆகியோரில், ஒருவர் தங்களது ஆதரவை வாபஸ் பெற்றால், மோடி அரசை காப்பாற்ற தி.மு.க., தயாராக இருக்கிறது,'' என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
வரும், 2026 சட்டசபை தேர்தலுக்கான பணிகளை துவங்கி விட்டோம். 100 வேட்பாளர்களை தேர்வு செய்து, சின்னத்திற்காக காத்திருந்தோம்.
தற்போது சின்னம் கிடைத்து விட்டதால், களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறோம். ஜூன் மாத இறுதிக்குள், போட்டியிடும் அனைத்து தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை அறிவிக்க திட்டமிட்டுள்ளோம்.
மொத்தம், 234 தொகுதிகளில், 134 தொகுதிகளுக்கு, 25 முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் களமிறக்கப்படுவர். எங்களுக்கான களம், மாற்று அரசியலை விரும்புகிற மக்களுக்கான களமாகும்.
பிரதமரை சந்தித்து கோரிக்கை வைக்க, முதல்வருக்கு பல்வேறு சூழல் இருந்தது. மூன்றாண்டுகள் அதையெல்லாம் நிராகரித்து விட்டு, தற்போது சந்திப்பது, சமீபத்தில் அமலாக்கத் துறை நடத்திய சோதனைக்காகவா என, முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும்.
ஒருவேளை, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீஹார் முதல்வர் நிதிஷ்குமார் யாராவது ஒருவர் கூட்டணியில் இருந்து விலகினால், மோடி அரசை காப்பாற்றும் நிலைக்கு தி.மு.க., வந்து விட்டது.
அதற்கான இணக்கமான சூழல் நிலவுவதை மத்திய அரசுக்கு தெரிவிக்கவே, முதல்வர் டில்லி சென்றார். பா.ஜ.,வுக்கும் இதுதான் தேவை என்பதால், அவர்களும் இதை மறைமுகமாக வரவேற்கத்தான் செய்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.

