ஹிந்தி விவகாரத்தில் திராவிட கட்சிகளை நம்ப வேண்டாம்; சீமான் எச்சரிக்கிறார்
ஹிந்தி விவகாரத்தில் திராவிட கட்சிகளை நம்ப வேண்டாம்; சீமான் எச்சரிக்கிறார்
ADDED : பிப் 19, 2025 11:52 PM
மதுரை: ''ஹிந்தி விவகாரத்தில் திராவிட கட்சிகளை நம்ப வேண்டாம் '' என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
மதுரையில் நேற்று அவர் கூறியதாவது: மும்மொழி கொள்கையில் தி.மு.க.,- அ.தி.மு.க., நிலைப்பாடு என்ன. தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்கிரஸ் நிலைப்பாடு என்ன. முதன் முதலில் ஹிந்தியை திணித்தது யார்.
ஹிந்தியை திணித்தவர்களிடம் கூட்டணி வைத்து தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது. திராவிட கட்சிகளின் ஆட்சியில் எந்த இடத்தில் ஹிந்தி இல்லை.
இந்திய மொழி ஹிந்தி என எந்த பைத்தியக்காரன் சொன்னது. இரண்டு மூன்று மாநிலங்களில் பேசக்கூடிய ஹிந்தியை நாடு முழுவதும் திணிக்க நினைப்பது தவறு. தேவையெனில் கற்றுக் கொள்ளலாம். ஹிந்தி விவகாரத்தில் திராவிட கட்சிகளை நம்ப வேண்டாம். ஹிந்தியை தி.மு.க., உளமாற எதிர்க்கிறதா.
ஹிந்தி திணிப்புக்கு எதிராக 800 பேர் போராடினார்கள். ஆனால் 18 பேர் என கணக்கு காட்டினார்கள்.
திராவிடம் பேசாமல் ஈ.வெ.ரா., குறித்து பேசாமல் நான் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக வளர்ந்துள்ளேன், ஆட்சி அதிகாரத்தில் இருந்த பெரிய பெரிய கட்சிகள் கூட்டணிக்கு அழைத்த போதே நான் செல்லவில்லை. ஆகவே த.வெ.க.,வுடன் கூட்டணி வைப்பது சரியாக வராது.
வருண்குமார் ஐ.பி.எஸ்., கட்சிக்காரன் போல பேசுகிறார். தேவையில்லாமல் சீண்டினால் வெறி வரும். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

