சீமான் பிரசாரத்திற்கு இடையூறு; தேர்தல் அதிகாரியிடம் புகார்
சீமான் பிரசாரத்திற்கு இடையூறு; தேர்தல் அதிகாரியிடம் புகார்
ADDED : ஜன 13, 2025 11:54 PM
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், சீமான் பிரசாரத்திற்கு இடையூறு விளைவிக்க திட்டமிட்டுள்ள காங்கிரஸ் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, நாம் தமிழர் கட்சியினர் அளித்த மனு:
அடுத்த மாதம், 5ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இதில், நா.த.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். அதற்காக, முறையான அனுமதி கோரப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், 12ம் தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தில், 'ஈரோடு கிழக்கு தொகுதிக்கு சீமான் வரும் போது, அவரை பேச விடாமல் எதிர்ப்பு தெரிவிப்போம்' என, மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜன் தெரிவித்துள்ளார்.
மக்களாட்சி அங்கீகரிக்கப்பட்ட நாட்டில், மாநில கட்சி தலைவருக்கு இடையூறு விளைவிப்போம் என்று கூறுமளவுக்கு, தேர்தல் ஜனநாயகம் கேள்விக்குள்ளாகி உள்ளது.
எனவே, காங்கிரஸ் கட்சியினர் மீது தேர்தல் நடத்தை விதிகளின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சீமான் உட்பட, நா.த.க.,வினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.