மக்களை விட போலீஸ் கூட்டம் அதிகம்; ஈரோடில் சீமான் பிரசாரம் பிசுபிசுப்பு
மக்களை விட போலீஸ் கூட்டம் அதிகம்; ஈரோடில் சீமான் பிரசாரம் பிசுபிசுப்பு
ADDED : ஜன 26, 2025 08:43 AM

ஈரோடு : ஈரோட்டில் தேர்தல் பிரசாரம் செய்த சீமானுக்கு கூட்டம் சேராததால் ஏமாற்றத்துடன் பிரசாரம் செய்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில், நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து, அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈரோட்டில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
காளை மாட்டு சிலை, மரப்பாலம், மண்டபம் வீதி ஜங்ஷன் பகுதிகளில் வேனில் ஓட்டு சேகரித்தார். பிரசாரத்துக்கு மக்கள் கூடவில்லை. சொற்ப அளவிலான அவரது கட்சியினர் மட்டுமே காணப்பட்டனர். அதே சமயம், போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கூட்டம் சேராததால் ஏமாற்றத்துடன் அவர் பிரசாரம் செய்தார்.
மண்டபம் வீதி ஜங்ஷனில், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ., இளங்கோவன் வீட்டருகே, சீமான் பிரசார வேன் நின்ற போது, அக்கட்சியை சேர்ந்த இடும்பாவன் கார்த்தி, ஈ.வெ.ரா.,வை விமர்சித்து பேசினார். இளங்கோவன் வீட்டு முன் நின்றிருந்த காங்., சிறுபான்மை பிரிவை சேர்ந்த ஜூபைர் அகமது தலைமையிலான கட்சியினர், தி.மு.க.,வினர், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சீமான் பிரசாரம் செய்யக்கூடாது என்றும் கோஷமிட்டனர். பதிலுக்கு நாம் தமிழர் கட்சியினர் எதிர்ப்பு கோஷமிட, பதற்றமான சூழல் ஏற்பட்டது.
பாதுகாப்பு பணியில் இருந்த டவுன் டி.எஸ்.பி., முத்துகுமரன் தலைமையிலான போலீசார், இரு தரப்பினரிடமும் பேசி சமாதானம் செய்தனர். தொடர்ந்து சீமான் பிரசார வாகனம் அங்கிருந்து சென்றது.