சீமான் புது கண்டுபிடிப்பு: 'தி.மு.க., - பா.ஜ., கூட்டணி பிரதமருடனான சந்திப்பே பின்னணி'
சீமான் புது கண்டுபிடிப்பு: 'தி.மு.க., - பா.ஜ., கூட்டணி பிரதமருடனான சந்திப்பே பின்னணி'
ADDED : அக் 19, 2024 01:25 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் நடந்த நாம் தமிழர் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க வந்த கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:
தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரத்தின் அடிப்படை கட்டமைப்பு வசதியை மேம்படுத்த 2,500 கோடி ரூபாய் இருந்தால் போதும். அதை முறையாக சீரமைக்க முடியும் என வல்லுனர்கள் கூறுகின்றனர்.
ஆனால், தமிழகத்தை ஆட்சி செய்த அ.தி.மு.க., மற்றும் ஆளும் தி.மு.க.,வினர் முறையாக கட்டமைப்பு செய்யவில்லை. இதனால், ஒவ்வொரு ஆண்டும் மழை வெள்ள நீரை போக்க அதிகளவு நிதி ஒதுக்கப்படுகிறது. சரியான திட்டமிடல் இல்லாததால் தான், இப்படியெல்லாம் நடக்கிறது.
மழை வெள்ள நீர் சீரமைப்பு குறித்து, தி.மு.க., மீது அ.தி.மு.க., குறை கூறி வருகிறது. அதற்கான தகுதி அக்கட்சிக்கு இல்லை.
இரு கட்சிகளும் இக்கட்டமைப்பில் தோல்வி அடைந்துள்ளதால், தொடர்ந்து ஓட்டளித்த மக்கள் தோற்று வருகின்றனர். மழை நீர் கால்வாய்க்கு ஒதுக்குகின்ற நிதி முழுதும் அரசியல்வாதிகள் வாய்க்கு சென்று விட்டன. தலைநகரின் நிலைமை இவ்வாறு என்றால், தமிழகம் முழுதும் நகராட்சிகளின் நிலைமை இன்னும் மோசம்.
தமிழக கவர்னரை மாற்றியே தீர வேண்டும் என்று அறைகூவல் விடுத்த தி.மு.க.,வினர் இப்போது அவரையே பாராட்டுகின்றனர்.
தமிழகத்தில் தற்போது பா.ஜ.,வும், தி.மு.க.,வும் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்துகின்றன. மற்ற மாநிலங்களைச் சேர்ந்த விளையாட்டுத் துறை அமைச்சர் யாரும் பிரதமரை அடிக்கடி சந்திக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் இருந்து அது நடக்கிறது. ஆனால், எதற்காக சந்திக்கிறோம் என இதுவரை கூறவில்லை.
தி.மு.க., - பா.ஜ., என இரு கட்சிகளுக்கும் இடையே வலுவான கூட்டணி உருவாகி விட்டதை, இந்த சந்திப்பு சம்பவங்கள் காட்டுகின்றன. பா.ஜ., கூட்டணியில் அ.தி.மு.க., இருந்தபோது தான், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழா நடந்தது.
அந்த விழாவிற்கு வராத பா.ஜ., அமைச்சர், தி.மு.க.,வுடன் நேரடியான கூட்டணி இல்லை என்றாலும், கருணாநிதி நுாற்றாண்டு விழா நாணய வெளியீட்டு விழாவுக்கு, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை கலந்து கொள்ள வைக்கின்றனர்.
பா.ஜ.,விற்கு நாங்கள் 'ஏ - டீம்' என்றால், தி.மு.க., 'பி - டீம்' அவ்வளவுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.

