தி.மு.க.,வுக்கு கட்சியினர் ஓடுவதை தடுக்க சீமான் சுற்றுப்பயணம்
தி.மு.க.,வுக்கு கட்சியினர் ஓடுவதை தடுக்க சீமான் சுற்றுப்பயணம்
ADDED : டிச 06, 2024 07:44 PM
நாம் தமிழர் கட்சியினர் தி.மு.க.,வுக்கு ஓட்டம் பிடிப்பதை தடுக்க, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கொங்கு மண்டலத்தில் முகாமிட்டுள்ளார்.
சமீபத்தில், கோவை வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூண்டோடு வெளியேறினர். நாம் தமிழர் கட்சியின் கோவை வடக்கு மாவட்ட செயலர் ராமச்சந்திரன், மகளிர் அணி மாவட்ட செயலர் அபிராமி, வணிகர் பாசறை செயலர் செந்தில்குமார் உட்பட, 20 பொறுப்பாளர்கள் மொத்தமாக வெளியேறினர். அவர்களில் பலர், அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில், தி.மு.க.,வில் இணைந்தனர்.
கோவையை தொடர்ந்து, ஈரோடு, நாமக்கல், சேலம், கரூர், நீலகிரி மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளையும் தி.மு.க.,வுக்கு இழுக்கும் பணிகளில், அமைச்சர் தீவிரமாக இருக்கிறார். அதையடுத்து, தன் கட்சி நிர்வாகிகளை தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில், சீமான் இறங்கியுள்ளார்.
அதற்காக, கொங்கு மண்டலத்தில் நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார். அங்குள்ள நிர்வாகிகளை சந்தித்து, அவர்களுக்கு தன்னுடைய அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவுபடுத்தி வருகிறார். அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை அழைத்து, பேச்சு நடத்தி வருகிறார்.
இதையடுத்து, 'வழக்கத்துக்கு மாறான சீமானை பார்க்கிறோம்; அவருடைய பேச்சு திருப்திகரமாக இருப்பதால், கட்சியை விட்டு வெளியே செல்லும் முடிவில் இருந்த கட்சியினர் பலரும் தற்போது முடிவை மாற்றி உள்ளனர்' என நாம் தமிழர் கட்சி தலைமை மீது அதிருப்தியில் இருந்த சிலர் கூறுகின்றனர்.
- நமது நிருபர் -