பறிமுதல் செய்யப்பட்ட வெடி பொருட்கள் நள்ளிரவில் வெடித்து கிடங்கு தரைமட்டம்
பறிமுதல் செய்யப்பட்ட வெடி பொருட்கள் நள்ளிரவில் வெடித்து கிடங்கு தரைமட்டம்
UPDATED : அக் 29, 2026 11:09 PM
ADDED : அக் 29, 2026 11:06 PM

காட்பாடி: காட்பாடி அருகே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த வெடிமருந்துகள், நள்ளிரவில் வெடித்து சிதறியதில் கிடங்கு தரைமட்டமானது. இது குறித்து மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த அர்ஜுனாபுரத்தில் பத்மநாபன், 50, என்பவருக்கு சொந்தமான வெடிமருந்து கிடங்கு உள்ளது. அக்., 26ம் தேதி, காட்பாடி அடுத்த சிங்காரெட்டியூரை சேர்ந்த கிருஷ்ணன், 55, என்பவரது விவசாய நிலத்தில் உள்ள பம்புசெட்டிற்குள் நான்கு மூட்டைகளில் வெடிபொருட்கள் கண்டறியப்பட்டது. அதில், பட்டாசு தயாரிப்பதற்கான கந்தகம், வெடிபொருள் நுால், கயிறு சேனல்கள், ஒயர்கள், மருந்து திரிகள் இருந்தன.
கிருஷ்ணன், காட்பாடி போலீசாருக்கு தெரிவித்தார். போலீசார், அந்த மூட்டைகளை கைப்பற்றினர். இவை நாட்டு வெடிகுண்டு தயாரிக்க கொண்டு வரப்பட்டதா என்பது குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட வெடிமருந்து மூலப்பொருட்கள் அனைத்தும், பாதுகாப்பு கருதி கே.வி.குப்பம் அர்ஜுனாபுரத்தில் உள்ள பத்மநாபனின் வெடிமருந்து கிடங்கில் வைக்கப்பட்டிருந்தன. நேற்று முன்தினம் இரவு அக்கிடங்கில் திடீரென பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
நள்ளிரவில் எழுந்த பயங்கர சத்தத்தை கேட்டு, சுற்றுவட்டார கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விபத்தில், வெடிமருந்து கிடங்கு முழுமையாக தரைமட்டமானது. கிடங்கின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 மினி வேன்களும் பலத்த சேதமடைந்தன. விபத்தில், கிடங்கின் கதவு துாக்கி வீசப்பட்டு, அருகில் இருந்த கன்றுகுட்டி மீது விழுந்து, அது பரிதாபமாக உயிரிழந்தது. கே.வி.குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, நேற்று வெடிபொருட்கள் முதலில் கண்டெடுக்கப்பட்ட காட்பாடி அடுத்த சிங்காரெட்டியூர் கிராமத்தில், மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை நிபுணர்கள், அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
