போக்கு காட்டிய ஒற்றை யானை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு
போக்கு காட்டிய ஒற்றை யானை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பு
ADDED : மார் 17, 2024 07:45 AM

பாப்பிரெட்டிப்பட்டி : தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வனச்சரகம், மாரண்டஹள்ளி காப்புக்காட்டிலிருந்து, 15 நாட்களுக்கு முன், 12 வயது ஆண் யானை ஒன்று வெளியேறி, கிராம பகுதிகளில் சுற்றித்திரிந்தது.
காரிமங்கலத்தில் அந்த யானை தாக்கியதில் படுகாயமடைந்த, ஜெயஸ்ரீ, 22, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த ஒற்றை யானை சோளக்கொட்டாய், தர்மபுரி நகராட்சியை ஒட்டிய பகுதி, பொம்மிடி அடுத்த முத்தம்பட்டி, கொண்டகரஹள்ளியில் சுற்றித்திரிந்தது.
இரு நாட்களாக சில்லாரஹள்ளி வனப்பகுதியை ஒட்டிய மயிலாப்பூர் கிராம பகுதியில் சுற்றித்திரிந்த யானை, 2 ஏக்கர் வாழை தோட்டம், நெற்பயிர்களை நாசம் செய்தது.
யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க, மொரப்பூர் வனத்துறையினர் முடிவு செய்தனர். மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தலைமையிலான அலுவலர்கள், மயக்க ஊசி குழுவினர், ட்ரோன் வாயிலாக யானையை கண்காணித்தனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணியளவில், சில்லாரஹள்ளி மயிலாப்பூரில், பரந்தாமன் விவசாய நிலத்தில் இருந்த யானையை, மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். கன்டெய்னரில் ஏற்றி, கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி வனப்பகுதிக்கு கொண்டு சென்றனர்.
இரு வாரங்களாக வனத்துறையினருக்கு போக்கு காட்டிய ஒற்றை யானை பிடிபட்டதால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.

