அறநிலையத்துறை தவறை மூடி மறைக்கும் சேகர்பாபு: காடேஸ்வரா
அறநிலையத்துறை தவறை மூடி மறைக்கும் சேகர்பாபு: காடேஸ்வரா
ADDED : நவ 26, 2024 06:58 PM
திருப்பூர்:ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்ட அறிக்கை:
தமிழகத்தில் ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் ஆயிரக்கணக்கான கோவில்கள் உள்ளன. அந்த கோவில்களை முறையாக பராமரிப்பது, சரியான காலத்தில் கும்பாபிஷேகம் செய்வது உட்பட அடிப்படை பணிகள் எதையும் செய்யாமல் அறநிலையத்துறை தோல்வியடைந்து விட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், பாபுராஜன் பேட்டை, விஜயவரதராஜர் கோவிலை சீரமைக்க, 2020ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும் கூட அதை செய்யவில்லை. இதையடுத்து, நீதிமன்றம், அறநிலையத்துறையை கண்டித்துள்ளது. உடனே சீரமைப்பு பணியை தொடங்கவும் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், சோளிங்கர் யோக நரசிம்மர் மலைகோவிலில் அடிப்படை வசதிகள் இல்லை என்று மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
குன்றக்குடி கோவில் யானை இறப்பு, பழநி கோவில் யானை இறப்பு, திருச்செந்துார் யானை தாக்கி பாகன்கள் இறப்பு என்று தொடர்ந்து, அறநிலையத் துறையின் இயலாமை வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது.
இந்நிலையில் தான், அமைச்சர் சேகர்பாபுடன் அமைச்சரவையில் இணைந்து பணியாற்றும் வனத்துறை அமைச்சர் பொன்முடி, அறநிலையத்துறையின் குளறுபடிகளை பொது வெளியில் விமர்ச்சித்துள்ளார். ஆனால், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, துறை மீது சிலர் திட்டமிட்டு பொய் பரப்புவதாக கூறுகிறார். அமைச்சர் தன் தவறை மறைக்க, அடுத்தவர் மீது குற்றங்களை சுமத்துகிறார்.
தொடர்ந்து நீதிமன்றமும் மக்களும் பல வகைகளில் கண்டித்த பின்னும் அறநிலையத்துறையிடம் எவ்வித மாற்றமும் இல்லை. எனவே, நிர்வாக திறமையற்ற அமைச்சர் சேகர்பாபு பதவி விலக வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளஊ.