ADDED : ஜூலை 25, 2024 10:25 AM
சென்னை: காவல் துறையின் மத்திய மண்டலத்தில் சிறந்த காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு, இன்ஸ்பெக்டர்களுக்கு, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பரிசு வழங்கி பாராட்டினார்.
காவல் துறையின் எல்லைகள் வடக்கு, தெற்கு, மத்திய மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஐ.ஜி.,க்கள் தலைமையில் நிர்வகிக்கப்படுகிறது.
அந்த வகையில் மண்டல வாரியாக, சிறந்த சேவை வழங்கிய காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகிறன. சமீபத்தில், வடக்கு மண்டலத்தில், 10 காவல் நிலையங்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
தற்போது, திருச்சியை தலைமையிடமாக செயல்படும், மத்திய மண்டலத்தில், திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லுார், பெரம்பலுார் மாவட்டம் பெரம்பலுார், அரியலுார் மாவட்டம் அரியலுார், தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் நகரம் மேற்கு, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல், கரூர் மாவட்டம் கரூர் நகரம், நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வளவூர், மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை காவல் நிலையங்கள் சிறந்தவையாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இக்காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு, டி.ஜி.பி., சங்கர் ஜிவால் பாராட்டி, நேற்று கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினார்.