செம்மண் குவாரி வழக்கு விசாரணை ஜன. 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு
செம்மண் குவாரி வழக்கு விசாரணை ஜன. 19ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ADDED : ஜன 07, 2024 02:36 AM
விழுப்புரம்:முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு மீதான விசாரணை ஜன.19ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
தமிழகத்தில் 2006 - 2011ல் தி.மு.க. ஆட்சியில் விழுப்புரம் மாவட்டம் வானுார் அடுத்த பூத்துறையில் அதிகமாக செம்மண் எடுத்ததன் வாயிலாக அரசுக்கு 28.36 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி. உட்பட 8 பேர் மீது 2012ல் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.
இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சியம் அளித்து வருவதால் அரசு தரப்புக்கு உதவியாக செயல்பட தங்களை அனுமதிக்கக்கோரி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செப்.8ல் மனு செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை நடந்தது.
ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர்கள் அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு அனுமதிக்க கோரினர்.
அரசு தரப்பு வழக்கறிஞர் கார்த்திகேயன் மற்றும் பொன்முடி தரப்பு வழக்கறிஞர்கள் ஜெயக்குமார் மனுவை தள்ளுபடி செய்திட வாதிட்டனர். அதனைத் தொடர்ந்து நீதிபதி பூர்ணிமா வழக்கு விசாரணையை ஜன.19க்கு ஒத்தி வைத்தார்.