ADDED : பிப் 11, 2025 07:48 PM
மதுரை,:''செங்கோட்டையன் விவகாரத்தில் பழனிசாமி பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் தி.மு.க., அரசு திட்டமிட்டு செயல்பட்டுள்ளது,'' என  முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ குற்றம்சாட்டினார்.
மதுரையில், அவர் அளித்த பேட்டி:
100 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட அத்திகடவு -- அவினாசி திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி வைத்தார். பழனிசாமி முடித்து வைத்துள்ளார். 4 ஆண்டுகள் 3 மாதம் ஆட்சி செய்தாலும் மக்கள் மனதில் நிற்கும் அளவிற்கு பழனிசாமி ஆட்சி செய்தார்.
இந்த விவகாரத்தில் அவரது பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் தி.மு.க., அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. விவசாயிகள் பாராட்டு விழாவிற்காக அமைக்கப்பட்ட பேனர், போஸ்டர்களில் எம்.ஜி.ஆ., ஜெயலலிதா படம் இடம் பெறவில்லை எனக் கூறி செங்கோட்டையன் வருத்தம் தெரிவித்தது, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம். அ.தி.மு.க., கட்சியையோ, பொதுச் செயலரையோ செங்கோட்டையன் குறை சொல்லவில்லை. இதனால், கட்சிக்குள் எந்த பிரச்னையும் இல்லை என்றும் செங்கோட்டையனே சொல்லிவிட்டார். அதன்பின்பும், கட்சிக்குள் குழப்பம் நீடிப்பது போல பேசுவது தேவையற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.

