அ.தி.மு.க., அதிருப்தியாளர்களை வளைக்க களமிறங்குகிறார் செங்கோட்டையன்
அ.தி.மு.க., அதிருப்தியாளர்களை வளைக்க களமிறங்குகிறார் செங்கோட்டையன்
UPDATED : டிச 02, 2025 04:36 AM
ADDED : டிச 02, 2025 04:35 AM

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, கோபிசெட்டிபாளையத்தில் பொதுக்கூட்டத்துக்கு பின், அ.தி.மு.க.,வில் உள்ள அதிருப்தியாளர்களை த.வெ.க., பக்கம் இழுக்க, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் களம் இறங்கி இருக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், த.வெ.க.,வில் இணைந்தார். மேலும், அ.தி.மு.க., தலைமை மீது கடும் அதிருப்தியில் இருக்கும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர் , த.வெ.க.,வில் இணைவர் என செங்கோட்டையன் தெரிவித்தார். இதையடுத்து, அ.தி.மு.க., அதிருப்தியாளர்களை வளைத்து, த.வெ.க.,வை வலுப்படுத்தும் செயல்திட்டத்தை செங்கோட்டையன் வேகப்படுத்தி இருக்கிறார். அவரது திட்டத்தை முறியடிக்க, கோபிசெட்டிபாளையத்தில் நேற்று முன்தினம் நடந்த பொதுக்கூட்டத்தில் பழனிசாமி பங்கேற்றார்.
அங்கு திரளாக கூடிய தொண்டர்கள் மத்தியில் பேசிய பழனிசாமி, 'அ.தி.மு.க., செல்வாக்குடன் உள்ளது; தன் பின்னாலேயே கட்சி செயல்படுகிறது' என அறிவித்தார். கூடவே, த,வெ.க., தலைவர் விஜய், செங்கோட்டையன் ஆகியோரை, பெயர் குறிப்பிடாமல் கடுமையாக விமர்சித்தார். இதைத் தொடர்ந்து, தன் சொந்த தொகுதியை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் செங்கோட்டையனுக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கொங்கு மண்டலத்தில் த.வெ.க., கட்டமைப்பை பலப்படுத்த வேண்டிய பொறுப்பும் அவருக்கு கூடுதலாகி உள்ளது.
எனவே, தான் சார்ந்துள்ள சமுதாயத்தினர் மட்டுமின்றி, மற்ற சமுதாயங்களில் உள்ள அ.தி.மு.க., அதிருப்தியாளர்களையும், பிற கட்சி நிர்வாகிகளையும், த.வெ.க.,வுக்கு இழுக்க செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து த.வெ.க., வட்டாரங்கள் கூறியதாவது: கொங்கு மண்டலத்தில் உள்ள நாமக்கல், ஈரோடு, கோவை, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில், 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அ.தி.மு.க., கோட்டையாக கருதப்படும் இந்த தொகுதிகளில், த.வெ.க., வெற்றி பெற வேண்டும் என்றால், கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமுதாயத்தினர் மட்டுமின்றி, இதர சமுதாயத்தினர் ஓட்டுகளையும் கவர வேண்டும்.
அதற்காக, கோவை மாவட்டத்தில், முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக உள்ள முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் மாவட்டச் செயலர்களை சந்தித்து பேச செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில், படுகர் இனத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரையும், ஈரோடு, நாமக்கல்லில் செங்குந்தர் முதலியார் சமுதாயத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.பி.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்களையும் சந்தித்து பேச, செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளார். எனவே, அடுத்தடுத்த நாட்களில், இதற்காக பல்வேறு சந்திப்புகள், திருப்பங்கள் நடக்கும். இவ்வாறு அவ்வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
- நமது நிருபர் -

