கட்சி பொறுப்புகளிலிருந்து செங்கோட்டையன் நீக்கம் : பழனிசாமி நடவடிக்கை
கட்சி பொறுப்புகளிலிருந்து செங்கோட்டையன் நீக்கம் : பழனிசாமி நடவடிக்கை
UPDATED : செப் 06, 2025 11:53 PM
ADDED : செப் 06, 2025 11:52 PM

சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு, 10 நாட்கள் கெடு விதித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அக்கட்சியின் அமைப்பு செயலர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலர் பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். செங்கோட்டையனுக்கு ஆதரவளித்த ஏழு பேரின் கட்சி பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அ.தி.மு.க., அமைப்பு செயலர், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலர் ஆகிய பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
அவருக்கு பதிலாக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டச் செயலராக, அமைப்பு செயலரும், முன்னாள் அமைச்சருமான ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ., நியமிக்கப்படுகிறார். இவருக்கு அ.தி.மு.க.,வினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டம், நம்பியூர் வடக்கு ஒன்றிய செயலர் தம்பி என்கிற சுப்பிரமணியன், நம்பியூர் தெற்கு ஒன்றிய செயலர் ஈஸ்வரமூர்த்தி என்கிற சென்னை மணி, கோபிசெட்டிப்பாளையம் மேற்கு ஒன்றிய செயலர் குறிஞ்சிநாதன்...
அந்தியூர் வடக்கு ஒன்றிய செயலர் தேவராஜ், அத்தாணி பேரூராட்சி செயலர் ரமேஷ், துணை செயலர் வேலு என்கிற மருதமுத்து, ஈரோடு மண்டல ஐ.டி., அணி துணை செயலர் மோகன்குமார் ஆகியோரும், அவரவர் வகிக்கும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப் படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அரவணைப்பு கோபிசெட்டிப்பாளையத்தில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், 'மறப்போம்; மன்னிப்போம் என்ற அடிப்படையில், வெளியே சென்றவர்களை அரவணைத்தால் மட்டுமே, தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியும்.
'அ.தி.மு.க.,வில் இருந்து வெளியே சென்ற வர்களை இணைக்க, பொதுச்செயலர் பழனிசாமி, 10 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்; இல்லையெனில், என் போன்ற மனநிலையில் இருப்பவர்களுடன் சேர்ந்து, ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்வேன்' என, எச்சரிக்கை விடுத்திருந்தார்.
எம்.ஜி.ஆர்., காலத்திலிருந்து, அ.தி.மு.க.,வில் பயணிக்கும் மூத்த தலைவரான செங்கோட்டையனின் கலகக்குரல், அக்கட்சியில் மட்டுமல்லாது, தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆலோசனை இந்தச் சூழலில், தென் மாவட்டங்களில் பிரசார பயணம் மேற்கொண்டு வரும் பழனிசாமி, திண்டுக்கலில் உள்ள தனியார் ஹோட்டலில், அ.தி.மு.க., முக்கிய நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, வேலுமணி, தங்கமணி, ஓ.எஸ்.மணியன், சீனிவாசன், விஸ்வநாதன், காமராஜ், விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களை இணைப்பது குறித்து, செங்கோட்டையன் தெரிவித்த கருத்துகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில், கட்சி பொறுப்புகள் அனைத்தில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டு உள்ளார்.