கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் 'கோர்ட்டுக்கு போவேன்!' என ஆவேசம்
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் 'கோர்ட்டுக்கு போவேன்!' என ஆவேசம்
ADDED : நவ 01, 2025 10:57 PM

சென்னை : 'அ.தி.மு.க.,வில் 53 ஆண்டுகளாக இருப்பவன் நான். என்னை எப்படி ஒரு விளக்கம் கூட கேட்காமல் நீக்க முடியும்? கட்சிக்கு துரோகம் செய்கிறார் பழனிசாமி. கட்சியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து, வழக்கு தொடரப் போகிறேன்,'' என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கடந்த 1972ல் எம்.ஜி.ஆர்., அ.தி.மு.க.,வை துவங்கியது முதல் பணியாற்றி வருகிறேன். 1975ல் கோவையில் நடந்த கட்சி பொதுக் குழுவை சிறப்பாக நடத்தி, எம்.ஜி.ஆரின் பாராட்டை பெற்றவன் நான்.
'இமயமே தன் தலையில் விழுகிறது என்றாலும், சறுக்காமல், வலுக்காமல் இயக்கத்திற்கு விசுவாசமாக இருப்பவர் செங்கோட்டையன்' என, ஜெயலலிதாவின் பாராட்டை பெற்றவன் நான்.
விட்டுக் கொடுத்தேன்
ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க., உடைந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன். அதனால் தான் கட்சியை வழி நடத்த, இரண்டு முறை கிடைத்த வாய்ப்பை விட்டுக் கொடுத்தேன்.
எம்.ஜி.ஆர்., தோல்வியையே சந்திக்காதவர். ஒரு முறை தோல்வி ஏற்பட்டால், அடுத்த தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பெற்றவர் ஜெயலலிதா.
ஆனால், பழனிசாமி தலைமை பொறுப்புக்கு வந்த பின், 2019, 2024 லோக்சபா தேர்தல்கள், 2021 சட்டசபை தேர்தல் என, எந்த தேர்தலிலும் அ.தி.மு.க., வெற்றி பெறவில்லை.
கடந்த 2024 லோக்சபா தேர்தல் தோல்விக்கு பின், பழனிசாமியை சந்தித்து, 'அ.தி.மு.க.,விலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும். அப்போது தான் வரும் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற முடியும்' என்று தெரிவித்தேன். அப்போது, என்னுடன் மூத்த நிர்வாகிகள் ஆறு பேர் இருந்தனர்.
தொண்டர்களின் உணர்வுகளையே வெளிப்படுத்தினோம். கடந்த செப்டம்பர் 5ம் தேதி, இதை செய்தியாளர் சந்திப்பில் பகிரங்கமாக அறிவித்தேன். 10 நாட்களில் ஒருங்கிணைப்பு பணியை துவங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்; ஆனால், ஊடகங்களில் கெடு விதித்ததாக செய்தி வெளியானது.
உடன், என்னை கட்சி பொறுப்புகளில் இருந்து பழனிசாமி நீக்கினார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவில் பன்னீர்செல்வம், தினகரனுடன் பேசியது உண்மை தான். அ.தி.மு.க.,வை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதற்காகவே சந்தித்தேன். அதற்கு கிடைத்த பரிசாகவே என்னை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார்.
சர்வாதிகாரம்
இதனால், மன வேதனை அடைகிறேன்; வருத்தம் அடைகிறேன்; கண்ணீர் சிந்துகிறேன். 53 ஆண்டுகளாக கட்சியிலிருக்கும் என்னை நீக்க வேண்டுமானால், முறைப்படி 'நோட்டீஸ்' அனுப்பி விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனால், விதியை மீறி சர்வாதிகார போக்குடன் பழனிசாமி என்னை நீக்கியுள்ளார்.
இது தொடர்பாக வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து, வழக்கு தொடர இருக்கிறேன். பழனிசாமி தற்காலிக பொதுச் செயலர் தான்.
கட்சிக்கு துரோகம் செய்யும் பழனிசாமி, என்னை தி.மு.க.,வின், 'பி டீம்' என்கிறார். ஆனால், கோடநாடு வழக்கில் பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பழனிசாமி விருப்பப்படி, எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியிலிருந்து பன்னீர்செல்வத்தை சபாநாயகர் நீக்கினார். இதிலிருந்து, யார் பி டீம் என்பதை நாடறியும். இவ்வாறு அவர் கூறினார்.

