விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்திப்பு
விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகருடன் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சந்திப்பு
ADDED : டிச 05, 2025 06:20 AM

தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்குமாறு, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் வலியுறுத்தி வரும் நிலையில், த.வெ.க., தலைவர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை, காங்., நிர்வாகிகள் சந்தித்துள்ளனர்.
தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்., சார்பாக கூட்டணி பேச்சு நடத்துவதற்காக, ஐவர் குழு அமைக்கப்பட்டு, தொகுதி பங்கீடு உள்ளிட்ட பேச்சை துவக்கி உள்ளனர். அதே நேரத்தில், ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதி உள்ளிட்ட கோரிக்கைகளை தி.மு.க., ஏற்காவிட்டால், விஜயின் த.வெ.க., உடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க வேண்டும் என, காங்., நிர்வாகிகள் சிலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் பிரமுகர் செந்தில்பாண்டியனின் அண்ணன் மகள் நிச்சயதார்த்த விழா, இரு தினங்களுக்கு முன் திருவாரூரில் நடந்தது. இதில், தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான, திருச்சி வேலுசாமி, பொன்.கிருஷ்ணமூர்த்தி, முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி உமாசங்கர் மற்றும் த.வெ.க., தலைவர் விஜயின் தந்தையும், திரைப்பட இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது, சந்திரசேகருடன், காங்., மூத்த தலைவர்கள் பேச்சு நடத்தினர். முன்னதாக, திருச்சி விமான நிலையத்தில் இருந்து திருவாரூருக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் சென்ற காரில், திருச்சி வேலுசாமியும் சென்றுள்ளார். அப்போது, அவர்கள் இருவரும் காங்கிரஸ், த.வெ.க., கூட்டணி அமைப்பது குறித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே, தமிழக காங்., முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், த.வெ.க., நிர்வாகக்குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஆகியோர், ஒரு நிகழ்ச்சியில் சந்தித்தனர். அப்போது இருவரும் கூட்டணி குறித்து பேசியதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், த.வெ.க., மற்றும் காங்கிரஸ் தரப்பில் மற்றுமொரு சந்திப்பு நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸ் தலைமையின் சம்மதமின்றி நடைபெற்றிருக்கும் இந்த சந்திப்புகளால் எவ்வித விளைவுகளும் ஏற்படப் போவதில்லை என, தமிழக காங்., தரப்பில் கூறினர்.
- நமது நிருபர் -

