வங்கி வழக்குகள் விசாரணையில் கூடுதல் கவனம் அவசியம் ஐகோர்ட் மூத்த நீதிபதி பேச்சு
வங்கி வழக்குகள் விசாரணையில் கூடுதல் கவனம் அவசியம் ஐகோர்ட் மூத்த நீதிபதி பேச்சு
ADDED : ஏப் 25, 2025 01:11 AM

சென்னை:''நீதித்துறை மீது மக்கள் நிறைய எதிர்பார்ப்பு வைத்துள்ளதால், அந்த நம்பிக்கையை பெற நேர்மையாக உழைக்க வேண்டும்,'' என, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பேசினார்.
சென்னை, அல்லிகுளம் நீதிமன்ற வளாகத்தில், வங்கி மற்றும் நிதி நிறுவன மோசடி தொடர்பாக, சி.பி.ஐ., பதிவு செய்யும் வழக்குகளை விசாரிக்க, கூடுதல் சிட்டி சிவில் மற்றும் அமர்வு நீதிமன்றம் அமைக்கப்பட்டு உள்ளது.
அதன் திறப்பு விழா, நேற்று காலை நடந்தது. சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் வரவேற்றார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி முன்னிலை வகித்தார். புதிய நீதிமன்றத்தை திறந்து வைத்து, உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் பேசியதாவது:
வங்கி அதிகாரிகள் துணையின்றி, மோசடி நடக்காது. வங்கிகள், நிதி நிறுவனங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் போது, இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வங்கி மோசடி என்பது, பொது மக்களை மோசடி செய்வது போன்றது.
இதுபோன்ற விவகாரங்களில், மோசடிக்கு யார் பொறுப்பு என்பதை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். தற்போது, நீதிமன்றங்களை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கேற்ப அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியதுள்ளது.
நீதித்துறை மீது, மக்கள் நிறைய எதிர்பார்ப்புகளை வைத்துள்ளனர். அந்த நம்பிக்கையை பெற வேண்டும். அவற்றின் வாயிலாக, தேசத்தை கட்டமைக்க துணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, லா அசோசியேஷன் தலைவர் பி.செல்வராஜ், செயலர் கே.ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

