அமைச்சரவையை தொடர்ந்து மா.செ.,க்கள் மாற்றம் தி.மு.க., திட்டத்தால் மூத்த அமைச்சர்கள் அதிருப்தி
அமைச்சரவையை தொடர்ந்து மா.செ.,க்கள் மாற்றம் தி.மு.க., திட்டத்தால் மூத்த அமைச்சர்கள் அதிருப்தி
ADDED : அக் 01, 2024 07:04 PM
அமைச்சரவை மாற்றத்தை தொடர்ந்து, மாவட்ட செயலர்களை மாற்றவும் தி.மு.க., தலைமை திட்டமிடுகிறது. தாங்கள் ஆதிக்கம் செலுத்தும் மாவட்டத்தை பிரிக்க, அமைச்சர்கள் சிலர் விரும்பாததால், இதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, அறிவாலய வட்டாரத்தில் கூறப்படுகிறது.
கடந்த 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் 8 கட்சிகள் இருந்தன. அதில், 38 தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்று, 53 சதவீதம் ஓட்டுக்களை கைப்பற்றியது. தி.மு.க.,வுக்கு மட்டும் 33.53 சதவீதம் ஓட்டுக்கள் கிடைத்தன.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இருந்து ஐ.ஜே.கே., வெளியேறிய நிலையில், ம.நீ.ம., சேர்ந்ததால், 8 கட்சிகள் என்ற அதே நிலை நீடித்தது. அதில், 40 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றாலும், 46.97 சதவீதம் ஓட்டுக்கள் தான் கிடைத்தன. தி.மு.க., 26.93 சதவீதம் ஓட்டுக்களே பெற்றது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலை விட, 2024 லோக்சபா தேர்தலில் வாங்கிய ஓட்டு சதவீதம், கூட்டணி என்ற முறையிலும், தனிப்பட்ட முறையிலும் தி.மு.க.,வுக்கு குறைந்துள்ளது. 2019ல் எதிர்க்கட்சி; இன்று ஆளும் கட்சியாக இருந்தபோதிலும், ஓட்டு வங்கி குறைந்துள்ளது குறித்து, தி.மு.க., மேலிடம் விசாரணை நடத்தியது.
அதில், மாவட்டச்செயலர்கள், அமைச்சர்கள் சிலர் சரிவர தேர்தல் பணி செய்யவில்லை என்பது தெரியவந்தது. அதையடுத்து, ஆட்சியிலும் கட்சியிலும் மாற்றம் செய்யப்படும் என, முதல்வர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் எச்சரித்திருந்தனர்.
அதன்படி, அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கட்சியில் மாற்றம் எப்போது நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. துணை முதல்வராக உதயநிதி நியமிக்கப்பட்டுள்ளதால், அவர் மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் செல்ல வேண்டியிருக்கிறது.
இந்த நேரத்தில் மாவட்டச்செயலர்களை மாற்றினால், சுற்றுப்பயணம் பாதிக்கக்கூடும் என்பதால், மாவட்டச்செயலர்கள் பட்டியல் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக, ஒரு காரணம் கூறப்படுகிறது. மேலும், இரு சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு மாவட்டம் என, கட்சி அமைப்பை பிரிக்க, அமைச்சர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
அவர்களின் ஆளுமையில் உள்ள மாவட்டம் பிரிக்கப்படுவதையும், புதிதாக ஒருவர் மாவட்டச்செயலராக வருவதையும் அவர்கள் விரும்பவில்லை. பட்டியல் வெளியீடு தாமதத்திற்கு இதுவே முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
இது குறித்து, தி.மு.க.., நிர்வாகிகள் கூறியதாவது:
அமைச்சரும், சென்னை கிழக்கு மாவட்டச்செயலருமான சேகர்பாபு கட்டுப்பாட்டில், 6 தொகுதிகளும், சென்னை தெற்கு மாவட்ட செயலரும், அமைச்சருமான மா.சுப்பிரமணியன் கட்டுப்பாட்டில், 5 சட்டசபை தொகுதிகளும் உள்ளன.
அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன், பெரியகருப்பன், தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட சில மூத்த அமைச்சர்களும், தாங்கள் மாவட்டச்செயலராக உள்ள மாவட்டங்களை பிரிக்க விரும்பவில்லை.
ஆனாலும், தகுதி இல்லாத மாவட்ட செயலர்களை மாற்றி, புதியவர்களை நியமிக்கும் பட்டியல் தயாராகி வருகிறது. அதில் திருநெல்வேலி, தென்காசி, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவை, திருப்பூர் போன்ற மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -