ADDED : செப் 17, 2025 01:12 AM
சென்னை:திருப்பத்துார் அருகே உள்ள ஆம்பூரில், 2015ல், பெரும் கலவரம் வெடித்தது.
இது தொடர்பான வழக்கை விசாரித்த திருப்பத்துார் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், 'வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில், 22 பேர் குற்றவாளிகள்' என அறிவித்து, இருவருக்கு தலா 14 ஆண்டு, ஆறு பேருக்கு தலா 7 ஆண்டு, 14 பேருக்கு தலா ஓராண்டு முதல் 4 ஆண்டு வரை சிறை தண்டனை விதித்து, கடந்த ஆக., 28ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து, வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட, பயாஸ் அகமது, சஜித் அகமது, முகமது இஸ்மாயில் மற்றும் சுஹெல் அகமது ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்தனர்.
இந்த மனு, நீதிபதி டி.வி.தமிழ்செல்வி முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில், 'அரசு தரப்பு சாட்சியத்தில் உள்ள முரண்பாடுகளை கருத்தில் கொள்ளாமல், வெறும் யூகத்தின் அடிப்படையில், விசாரணை நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது' என, வாதிடப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி, மனுதாரர்கள் நால்வருக்கு விதிக்கப்பட்ட மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார்.

