ஜாமின் கிடைக்குமா செந்தில் பாலாஜிக்கு? ஜன. 12ல் நீதிமன்றம் தீர்ப்பு
ஜாமின் கிடைக்குமா செந்தில் பாலாஜிக்கு? ஜன. 12ல் நீதிமன்றம் தீர்ப்பு
UPDATED : ஜன 10, 2024 08:49 AM
ADDED : ஜன 09, 2024 02:24 PM

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது, ஜன., 12ல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், கடந்தாண்டு ஜூன் 14ல், அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத் துறை கைது செய்தது. இந்த வழக்கில், ஜாமின் கேட்டு, 3வது முறையாக செந்தில் பாலாஜி சார்பில், சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, அமலாக்கத் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனு, நீதிபதி எஸ்.அல்லி முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில், டில்லி மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், அமலாக்கத் துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகினர்.
மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் வாதாடியதாவது:
சிறையில், 207 நாட்களாக மனுதாரர் உள்ளார். இந்த வழக்கில் விசாரணையும், காவல் விசாரணையும் முடிந்து விட்டது. கைப்பற்றிய அனைத்து ஆவணங்களும், அமலாக்கத் துறையிடம் உள்ளன. சிறையில் தொடர்ந்து அடைப்பது, மனுதாரருக்கு தண்டனையை முன்னரே விதிப்பது போலாகும்.
இவ்வாறு அவர் வாதாடினார்.
கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் வாதாடியதாவது:
வருமான வரி துறை அதிகாரிகளை, மனுதாரர் உள்ளிட்டோர் தாக்கியுள்ளனர். வருமான வரி கணக்கு தாக்கல் செய்தால், அந்த பணம் முறையாக சம்பாதித்தது என்று அர்த்தம் இல்லை. வருமான ஆதாரம் குறித்து விளக்கப்படவில்லை. இலாகா இல்லாத அமைச்சராக தொடர்கிறார்.
சூழ்நிலைகளில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை. ஜாமின் கோரி, ஒவ்வொரு மாதமும் மனு தாக்கல் செய்ய முடியாது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில் கைதானால், குற்றம் சாட்டப்பட்டவர் காவலில் இருக்க வேண்டும்.
இவ்வாறு வாதாடினார்.
இரு தரப்பு வாதங்களை அடுத்து, ஜாமின் மனு மீது, ஜன., 12ல் உத்தரவு பிறப்பிக்கப்படும் என, நீதிபதி எஸ்.அல்லி தெரிவித்தார்.