ADDED : ஜன 30, 2024 12:15 AM
சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜியை கடந்தாண்டு ஜூன் 14ல் அமலாக்கத் துறை கைது செய்தது; 3,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
அடுத்த கட்டமாக, கடந்த 22ல் குற்றச்சாட்டுகள் பதிவுக்கான தேதி நிர்ணயிக்கப்பட்டது.
அப்போது, 'போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக, பணம் வாங்கியதாக, சென்னை மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறையின் இந்த வழக்கின் விசாரணையை துவக்கக் கூடாது' என, செந்தில் பாலாஜியின், வழக்கறிஞர் பரணிகுமார் புதிய மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க, நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்கத் துறை சார்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் ரமேஷ் ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்தார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சாட்சி விசாரணையை தள்ளிவைக்க கோரி தான், மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது; குற்றச்சாட்டு பதிவை அல்ல.
போதுமான எந்த காரணமும் இல்லாததால், விசாரணையை தள்ளி வைக்க கோரும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். பிரதான குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதால், சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கின் விசாரணையை, தள்ளி வைக்க கோர முடியாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த பதில் மனுவுக்கு பதிலளித்து வாதிட, செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் அவகாசம் கோரியதை ஏற்று, வரும் 31க்கு விசாரணையை, நீதிபதி அல்லி ஒத்திவைத்தார்.
மேலும், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலையும், 17வது முறையாக, வரும் 31 வரை நீட்டித்தும் உத்தரவிட்டார்.