செந்தில் பாலாஜி தம்பி அமெரிக்கா செல்ல நிபந்தனை மாற்றி அமைப்பு: ஐகோர்ட்
செந்தில் பாலாஜி தம்பி அமெரிக்கா செல்ல நிபந்தனை மாற்றி அமைப்பு: ஐகோர்ட்
ADDED : ஆக 29, 2025 04:36 AM
சென்னை:முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், இதய அறுவை சிகிச்சைக்காக, அமெரிக்கா செல்ல விதிக்கப்பட்ட நிபந்தனைகளை, சென்னை உயர் நீதிமன்றம் மாற்றி அமைத்து உத்தரவிட்டுள்ளது.
சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் உட்பட 13 பேருக்கு எதிராக, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், இதய அறுவை சிகிச்சை செய்து கொள்ள, அமெரிக்கா செல்ல அனுமதி கோரி, அசோக்குமார் தாக்கல் செய்த மனுவை, ஜூலை 9ல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அசோக்குமார் மேல்முறையீடு செய்தார்.
இதை விசாரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வு, விசாரணை நீதிமன்றத்தில், 5 லட்சம் ரூபாய் 'டிபாசிட்' செய்ய வேண்டும்; மகளின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்பது உடப்ட பல்வேறு நிபந்தனைகளுடன், அசோக்குமார் அமெரிக்கா செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவில் உள்ள நிபந்தனைகளை மாற்றி அமைக்க கோரி, அசோக்குமார் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அடங்கிய அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அசோக்குமார் தரப்பில், 'அமெரிக்காவுக்கு என்னுடன் மனைவிக்கு பதிலாக, மகள் வர உள்ளார். பயண தேதியிலும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.
'அமெரிக்கா சென்றதும், அங்குள்ள இந்திய துாதரகத்துக்கு நேரில் சென்று தகவல் தெரிவிப்பதற்கு பதில், மின்னஞ்சல் வாயிலாக தகவல் தெரிவிக்க அனுமதிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதிகள், அசோக்குமார் சிகிச்சைக்கு, அமெரிக்கா செல்வதற்கான நிபந்தனைகளை மாற்றி அமைத்து உத்தரவிட்டனர்.

