செந்தில் பாலாஜி ஜாமின் மனு ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு
செந்தில் பாலாஜி ஜாமின் மனு ஐகோர்ட்டில் தீர்ப்பு தள்ளிவைப்பு
ADDED : பிப் 22, 2024 03:02 AM
சென்னை:முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். ஜாமின் கோரி, இரண்டாவது முறையாக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், அது விசாரணைக்கு வந்தது.
செந்தில் பாலாஜி தரப்பில், மூத்த வழக்கறிஞர் ஆர்யமா சுந்தரம் வாதாடியதாவது:
செந்தில் பாலாஜி வீட்டில் கைப்பற்றியதாகக் கூறிய ஆதாரங்களை, தற்போது மாநகர போக்குவரத்து கழக அலுவலகத்தில் இருந்து பெற்றதாக அமலாக்கத் துறை தெரிவிக்கிறது. செந்தில் பாலாஜிக்கு எதிரான 30 வழக்குகளில், 21 வழக்குகள் ரத்தாகி விட்டன; ஆறு வழக்குகள், முதல்வருக்கு எதிராக கோஷம் எழுப்பியது, போஸ்டர் ஒட்டியது தொடர்பானவை தான்.
கரூரில் சோதனைக்குச் சென்ற வருமான வரி அதிகாரிகளை தாக்கியதாகக் கூறப்பட்ட சம்பவத்துக்கும், செந்தில் பாலாஜிக்கும் சம்பந்தம் இல்லை. வேலை வாங்கி தருவதாக, 67 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை.
புலன் விசாரணை முடிந்து விட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. தற்போது அவர் அமைச்சராக இல்லை; ஜாமின் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் வாதாடினார்.
அமலாக்கத் துறை சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் ஆஜராகி, ''2,700 இடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டனர். பணம் கொடுக்கப்பட்டதற்கான விபரம், 'பென்டிரைவி'ல் உள்ளது. 67 கோடி ரூபாய் வசூலித்தது தொடர்பான ஆவணங்களும், சிறப்பு நீதிமன்றத்தால் சான்றளிக்கப்பட்டவை.
''ஜாமின் மனு விசாரணைக்கு வந்ததால் தான், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். சாட்சிகள் மிரட்டப்பட மாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. ஜாமின் வழங்கக் கூடாது,'' என்றார்.
இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், ஜாமின் மனுவின் உத்தரவை, தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தள்ளி வைத்தார்.