செந்தில் பாலாஜியின் சிறைவாசம் தியாகமே: எதிர்ப்புகளுக்கு முதல்வர் விளக்கம்
செந்தில் பாலாஜியின் சிறைவாசம் தியாகமே: எதிர்ப்புகளுக்கு முதல்வர் விளக்கம்
ADDED : செப் 30, 2024 06:06 AM

சென்னை : 'செந்தில் பாலாஜியை வைத்து, கட்சிக்கு எதிரான சதி செயல்களை செய்ய, ஒரு கூட்டம் திட்டமிட்ட நிலையில், 15 மாத சிறையை அவர் ஏற்றது தான் தியாகம்.
தன்னால் கட்சிக்கு களங்கம் வரக்கூடாது என்று நினைப்பவர்களால் தான் தி.மு.க., இயங்குகிறது' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
மூன்று ஆண்டு கால வளர்ச்சிக்கு, தமிழக அமைச்சர்கள் அனைவரும் பங்களித்து உள்ளனர். அதன் இன்னொரு கட்டமாகவே, துணை முதல்வராக உதயநிதி நியமிக்கப்பட்டு உள்ளார்.
முதல்வரான எனக்கு துணையாக அல்ல; இந்த மாநில மக்களுக்கு துணையாக அவர் இருக்க போகிறார். மாநிலத்தின் வளர்ச்சிக்கு இன்னும் கூடுதலாக உழைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்தே, துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. முன்பை விட கூடுதல் உழைப்பை அவர் செலுத்த வேண்டும்.
கடந்த கால உழைப்பு
செந்தில் பாலாஜிக்கும், மீண்டும் அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது. அவரது தியாகத்தை நான் வாழ்த்தியதை, சிலரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
செந்தில் பாலாஜியை வைத்து, கட்சிக்கு எதிரான சதி செயல்களை செய்ய ஒரு கூட்டம் திட்டமிட்டது. அதற்கு விலையாக, 15 மாத சிறையை அவர் ஏற்றது தான் தியாகம்.
தன்னால் கட்சிக்கு களங்கம் வரக்கூடாது என்று நினைப்பவர்களால் தான் தி.மு.க., இயங்குகிறது.
புதிதாக பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். கடந்த கால உழைப்பையும், நிகழ்கால திறனையும் மனதில் வைத்து, பொறுப்புகளை ஒப்படைத்துள்ளேன்.
தங்களுக்கு வழங்கப்பட்ட துறையை, எந்த விமர்சனங்களுக்கும் ஆளாகாமல் கவனித்து, அந்த துறை வாயிலாக மாநிலத்தை வளப்படுத்த வேண்டும்.
சில அமைச்சர்களுக்கு துறையில் மாறுதல்கள் செய்யப்பட்டு உள்ளன. புதிய துறையில் கவனத்துடன் பணியாற்ற வேண்டும். அமைச்சர்களிடம் நான் வைத்துள்ள நம்பிக்கையை விட, மக்கள் அதிகமான நம்பிக்கையை வைத்துள்ளனர்.
கடைக்கோடி
நமக்கு ஓட்டளித்துள்ள மக்களின் நம்பிக்கையை காக்கும் வகையில், அனைவரும் செயல்பட வேண்டும். அரசின் ஒவ்வொரு திட்டமும் கடைக்கோடி மனிதரையும் சென்று சேர்கிறதா என்பதை கவனிப்போம்.
இனி, எந்த நாளும் தமிழகத்தை தி.மு.க., தான் ஆட்சி செய்யும் என்ற நிலையை உருவாக்க உறுதியேற்போம். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

