செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 30வது முறை நீட்டிப்பு
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 30வது முறை நீட்டிப்பு
ADDED : மார் 28, 2024 05:22 PM

சென்னை: சிறையில் இருக்கும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 30வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து விடுதலை கோரி சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், நேற்று( மார்ச் 27) தாக்கல் செய்த மனுவில், ‛‛இந்த வழக்கு தொடர்பான சில ஆவணங்களை கோரி நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அந்த ஆவணங்கள் இன்னும் கிடைக்கவில்லை. எனவே, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து தன்னை விடுதலை கோரிய மனு மீது வாதங்களை முன்வைக்க அனுமதிக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டு, விசாரணை ஏப்ரல் 4ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
காவல் நீட்டிப்பு
இதற்கிடையே சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதனையடுத்து புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் முன்பு அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 4ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவிட்டார். இதன்மூலம் 30வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

