அமலாக்க துறை தரப்பு சாட்சியிடம் செந்தில் பாலாஜி வக்கீல் விசாரணை
அமலாக்க துறை தரப்பு சாட்சியிடம் செந்தில் பாலாஜி வக்கீல் விசாரணை
ADDED : அக் 04, 2024 11:19 PM
சென்னை:அமலாக்கத் துறை வழக்கில், சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில், அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆஜரானார். அமலாக்கத் துறை தரப்பு சாட்சியிடம், வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார்; 15 மாதங்களுக்கு பின், உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது.
அமலாக்கத் துறை வழக்கில், செந்தில் பாலாஜிக்கு எதிராக, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சிகள் விசாரணையும் துவங்கியது.
இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி ஆஜரானார். அப்போது, அமலாக்கத் துறை தரப்பு சாட்சியான தடயவியல் துறை உதவி இயக்குனர் மணிவண்ணன் ஆஜராகவில்லை. அதனால், அவருக்கு வாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நீதிபதி கார்த்திகேயன் முன் அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆஜரானார். அமலாக்கத் துறை சாட்சியான மணிவண்ணனும் ஆஜரானார்.
அப்போது, சிறப்பு நீதிமன்றத்தில், வேலை மோசடி வழக்கு நிலுவையில் இருக்கும் போது, அதன் விசாரணையை முடிக்காமல் அமலாக்கத் துறை வழக்கை விசாரிக்க முடியுமா என்பதற்கு, உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் பெற உள்ளதாக, செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்தார். அதனால், விசாரணையை தள்ளிவைக்கவும் கோரினார்.
அதை ஏற்க மறுத்த நீதிபதி, சாட்சி விசாரணையை துவங்கும்படி தெரிவித்தார். அதைத்தொடர்ந்து, தடயவியல் உதவி இயக்குனர் மணிவண்ணனிடம், செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கவுதமன் குறுக்கு விசாரணை செய்தார்.
விசாரணை முடியாததால், வரும் 29க்கு நீதிபதி கார்த்திகேயன் தள்ளிவைத்தார்.