'சிட்கோ'வின் தொழில் மனைகளை வாங்க ஒரே குடும்பத்தை சேர்ந்தோர் தனித்தனி விண்ணப்பம்
'சிட்கோ'வின் தொழில் மனைகளை வாங்க ஒரே குடும்பத்தை சேர்ந்தோர் தனித்தனி விண்ணப்பம்
ADDED : அக் 25, 2025 07:49 PM
சென்னை: முக்கிய நகரங்களில், அதிக தேவையுள்ள இடங்களில் இருக்கும் தொழிற்பேட்டையில், தொழில் மனைகளை வாங்க, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் தனித்தனியே விண்ணப்பிப்பதை, 'சிட்கோ' எனப்படும், தமிழக சிறு தொழில் வளர்ச்சி நிறுவன அதிகாரிகள் கண்டுபிடித்து உள்ளனர்.
தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஆலை அமைக்க, பல உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழிற்பேட்டைகளை தமிழக அரசின், 'சிட்கோ' நிறுவனம் அமைக்கிறது.
முழு கவனம்
இங்குள்ள தொழில் மனைகளில், வாகன உதிரிபாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை நிறுவனங்கள் உற்பத்தி செய்கின்றன. தற்போது, மாநிலம் முழுதும், 135 தொழிற்பேட்டைகளை நிர்வகித்து வரும் சிட்கோ, பல மாவட்டங்களில் புதிய தொழிற்பேட்டைகளையும் அமைத்து வருகிறது.
சென்னைக்கு அருகே திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் கடலுார், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில், முக்கிய இடங்களில் உள்ள தொழிற்பேட்டைகளுக்கு, தேவை அதிகம் உள்ளது.
இதனால், அந்த தொழிற்பேட்டைகளில் உள்ள மனைகளை வாங்க, ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், தனித்தனியே விண்ணப்பம் செய்கின்றனர்.
இதை, சிட்கோ அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இதை தடுக்க, மனை ஒதுக்கீட்டிற்கான நேர்காணலில் முழு கவனம் செலுத்தப்படுகிறது.
இது குறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஒரு நிறுவனத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் உரிமையாளர்களாக இருப்பர். அவர்கள், நிறுவனத்தின் விரிவாக்க நடவடிக்கைக்காக, வெவ்வேறு இடங்களில் உள்ள தொழிற்பேட்டைகளின் மனைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஏற்கனவே உள்ள மற்றும் புதிய தொழிற்பேட்டைகளின் மனைகளை ஒதுக்கீடு செய்ய, சமீபத்தில் விண்ணப் பங்கள் பெறப்பட்டன.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலுார் மாவட்டங்களில் உள்ள தொழிற்பேட்டைகளில், ஒரு தொழிற்பேட்டையில் உள்ள மனையை வாங்க, ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மனைவி, மகன், மகள் என, பலர் விண்ணப்பம் செய்தது ஆய்வின்போது தெரிய வந்தது.
ஒரு தொழிற்பேட்டையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நபர் ஒருவருக்கு மட்டுமே மனை ஒதுக்கப்படும்.
முன்னுரிமை
எனவே, மனை ஒதுக்கீட்டிற்காக விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்களிடம், அதிகாரிகள் அடங்கிய நேர்காணல் குழு, தொழில்முனைவோரா, ஒரே குடும்பத் தினரா என்பதை பல முறை சரிபார்த்து மனைகள் ஒதுக்கப்படுகின்றன.
மனை ஒதுக்கீட்டில், புதிய தொழில் முனைவோர், மாற்றுத்திறனாளி களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

