கோவில்களை பராமரிக்க தனி வாரியம்: பிராமணர் சங்க மாநாட்டில் தீர்மானம்
கோவில்களை பராமரிக்க தனி வாரியம்: பிராமணர் சங்க மாநாட்டில் தீர்மானம்
ADDED : ஜன 01, 2024 05:51 AM

திருச்சி : 'தமிழக கோவில்களை சிறப்பான முறையில் நிர்வகித்து பராமரிக்க, தன்னாட்சி உரிமை கொண்ட தனி வாரியம் அமைக்க வேண்டும்' என, திருச்சியில் நடந்த பிராமணர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருச்சி, திருவானைக்காவலில் நேற்று, தமிழ்நாடு பிராமணர் சங்க மகளிர் அணி மற்றும் இளைஞர் அணி மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் மாநில தலைவர் என்.நாராயணன் வரவேற்று அறிமுக உரையாற்றினார்.
கோவில் கந்தாடை அண்ணன் சுவாமிகள் அருளாசி வழங்கினார். டாக்டர் ராதா ராமச்சந்திரன், கலா ரத்னா சிந்துஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். டாக்டர் விஜயசுந்தரி, நடிகை மற்றும் சமூக சிந்தனையாளர் கஸ்துாரி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இளைஞரணி அமர்வில், மும்பை தொழிலதிபர் சேஷாத்திரி நாதன், நடிகர் மற்றும் சினிமா தயாரிப்பாளர் 'பிரமிட்' நடராஜன், தமிழ்நாடு மீனவர் பேரவை நிறுவனர் தலைவர் அன்பழகனார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
காமராஜர் மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன், மணிகண்டன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாநாட்டில், சில நாட்களுக்கு முன், உடல் நலக்குறைவால் இறந்த, தே.மு.தி.க., தலைவர் விஜய்காந்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, வரலாறு காணாத பெரும் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட இடர்பாடுகளை சமாளிக்க நடவடிக்கை எடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாவன:
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையை அதிகரித்து வழங்க வேண்டும். மத்திய அரசு சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தியுள்ள பொருளாதார அடிப்படையில் நலிந்தோருக்கான, 10 சதவீதம் இட ஒதுக்கீட்டை, தமிழக அரசு கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்ளவில்லை.
இந்த முடிவை மறு பரிசீலனை செய்வதோடு, 10 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்தி, முற்பட்ட சமூகங்களின் ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மக்களுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும்.
கேரளா அரசை போல முற்பட்ட சமூகங்களை சேர்ந்த நலிந்தோருக்கு உதவும் வகையில், தமிழக அரசு தனி நல வாரியம் ஏற்படுத்த வேண்டும்.
ஹிந்து சமய அறநிலையத் துறையினரால் நியமிக்கப்பட உள்ள அறங்காவலர் குழு நியமனங்களில், அந்தந்த கோவில் ஸ்தலத்தார்கள், தீர்த்தகாரர்கள் மற்றும் பிராமணர்களுக்கும் தகுந்த பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும்.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை மேலும் சிறப்பான முறையில் நிர்வகித்து பராமரிக்க உதவும் வகையில், அவற்றை தன்னாட்சி உரிமை கொண்ட தனி வாரியம் அமைத்து நிர்வகிக்க வேண்டும்.
இவ்வாறு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.