செர்பியா ஜிம்னாசியாட் விளையாட்டு வீரர்கள் 6 பேருக்கு ரூ.15 லட்சம்
செர்பியா ஜிம்னாசியாட் விளையாட்டு வீரர்கள் 6 பேருக்கு ரூ.15 லட்சம்
ADDED : ஏப் 03, 2025 01:15 AM
சென்னை:செர்பியா நாட்டில் நடக்க உள்ள, ஜிம்னாசியாட் விளையாட்டு போட்டிகளில், பங்கேற்க செல்லும் ஆறு வீரர் --- வீராங்கனையருக்கு, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில், 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்.
தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளில் விளையாட செல்லும், சிறந்த விளையாட்டு வீரர் - வீராங்கனையரின் போக்குவரத்து, தங்குமிடம், உணவு மற்றும் பயிற்சி செலவுகளுக்கு, தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில், நிதியுதவி வழங்கப்படுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், 16.56 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. நிதியுதவி பெற்ற வீரர் - வீராங்கனையர், 100க்கும் மேற்பட்ட தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்றுஉள்ளனர்.
அந்த வகையில், வரும் 4ம் தேதி முதல் 14ம் தேதி வரை, சர்வதேச பள்ளி விளையாட்டு கூட்டமைப்பின் சார்பில், 15 வயதுக்கு உட்பட்டோருக்கான ஜிம்னாசியாட் போட்டி, செர்பியாவில் நடக்க உள்ளது.
இதில், தமிழகத்தை சேர்ந்த ஆறு வீரர் - வீராங்கனையர் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கான செலவுத் தொகையாக, ஒவ்வொருவருக்கும் தலா 2.50 லட்சம் ரூபாய் வீதம், 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, துணை முதல்வர் உதயநிதி நேற்று வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
அப்போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் பயிற்சியாளர்கள் உடனிருந்தனர்.