முன்னாள் எம்.எல்.ஏ., சுதர்சனம் கொலை வழக்கு மூவர் குற்றவாளி என செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு
முன்னாள் எம்.எல்.ஏ., சுதர்சனம் கொலை வழக்கு மூவர் குற்றவாளி என செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு
ADDED : நவ 21, 2025 11:35 PM
சென்னை: அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., சுதர்சனம், பவாரியா கொள்ளையர் களால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், மூன்று பேர் குற்றவாளி என, சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளிகளுக்கான தண்டனை விபரங்கள், நாளை மறுதினம் அறிவிக்கப்பட உள்ளன.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி, அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., - கே.சுதர்சனம்; பெரியபாளையம் அருகே உள்ள தானா குளத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். 2001- முதல், 2006 வரையிலான ஜெயலலிதா ஆட்சியில், சிறிது காலம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தார்.
பரபரப்பு கடந்த 2005 ஜனவரி 9ம் தேதி தன் வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, வடமாநிலத்தைச் சேர்ந்த ஆறு பேர் கும்பல், வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தது. சுதர்சனத்தின் மகன் விஜயகுமார், சதீஷ்குமார் ஆகியோரை கட்டை மற்றும் ஆயுதங்களால் தாக்கியது.
வீட்டின் மாடியில் துாங்கிக் கொண்டிருந்த சுதர்சனம், சத்தம் கேட்டு கீழே வந்த போது, அந்த கும்பல் அவரை துப்பாக்கியால் சுட்டது. இதில், சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.
பின், அந்தக் கும்பல், சுதர்சனம் வீட்டில் இருந்த, 62 சவரன் நகை, பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றது. இந்த சம்பவம், தமிழகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, பவாரியா கொள்ளையர்களான, ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ், அவரது சகோதரர் ஜெகதீஷ் மற்றும் ராகேஷ், அசோக், ஜெயில்தர் சிங் ஆகியோரை கைது செய்தனர். சிறையில் இருந்த ஓம்பிரகாஷ் உடல்நல குறைவால் உயிரிழந்தார்.
இதையடுத்து, மற்ற நான்கு பேர் மீதான வழக்கு விசாரணை, சென்னை, 15வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில், 50-க்கும் மேற்பட்டோர் சாட்சியம் அளித்தனர். 20 ஆண்டுகளாக நடந்த வழக்கில், போலீசார் தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர்கள் ஜி.சீனிவாசன், என்.மகாராஜன் ஆகியோர் ஆஜராகினர்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நேற்று வழக்கில் தீர்ப்பு கூறப்படும் என நீதிபதி எல்.ஆபிரகாம் லிங்கன் அறிவித்திருந்தார்.
அதன்படி, வேறொரு வழக்கில் தண்டனை பெற்று, புழல் சிறையில் இருந்து வரும் ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர் நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
குறைவான தண்டனை ஜாமினில் வெளியில் இருந்த ஜெயில்தர் சிங்கும் ஆஜரானார். இவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெகதீஷ், ராகேஷ், அசோக் ஆகியோர், எந்தெந்த குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளி என்பதை தெரிவித்து, அவர்களுக்கான தண்டனை விபரம், வரும் 24ம் தேதி அறிவிக்கப்படும் என, நீதிபதி தெரிவித்தார்.
முன்னதாக தண்டனை குறித்து, குற்றவாளி களிடம் நீதிபதி கருத்து கேட்டார். அதற்கு அவர்கள், 'தங்களுக்கு குறைவான தண்டனை வழங்க வேண்டும்' என்று முறையிட்டனர்.
'ஜெயில்தர் சிங்கை பொறுத்தவரை, அவர் மீதான குற்றச்சாட்டு அடிப்படையில், அவர் குற்றவாளியா, இல்லையா என, நாளை மறுதினம் முடிவெடுக்கப்படும்' என்று நீதிபதி அறிவித்தார்.

